Islamic Widget

January 05, 2011

காவலர் லஞ்சம் வாங்கினால் 8 ஆண்டு வரை சிறை தண்டனை - கேரளம் அதிரடி!

கேரள மாநில காவல்துறையினைச் சீர்திருத்தும் வகையில் பலவிதமான பரிந்துரைகளுடன் கேரள காவல்துறை சட்டம் 2010 கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 ஆம் கேரள சட்டசபையின் 16 ஆவது கூட்டத்தின் இறுதி நாளான நேற்று, சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்து கேரள காவல்துறை சட்டம் 2010 நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காவல்துறையின் செயல்பாடுகளைச் சீர்திருத்துமுகமாக மாநில பாதுகாப்பு கமிசன் உருவாக்கப்படும் என்ற முடிவு இதில் முக்கியமானதாகும். 10 உறுப்பினர்கள் கொண்ட இக்கமிசனின் தலைவராக மாநில உள்துறை அமைச்சர் செயல்படுவார். இக்கமிசன் காவல்துறையின் செயல்பாடுகளை ஊன்றி கவனித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும். தொடரும் ஆண்டுக்கான காவல்துறை செயல்பாட்டின் இலட்சியங்களை வரையறுப்பதும் கடந்து போன ஆண்டில் காவல்துறையின் செயல்பாடுகளை அலசி தேவையான மேல் நடவடிக்கை எடுப்பதும் இக்கமிசனின் பிரதான செயல்பாடாகும்.காவல்துறை உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதும் இக்கமிசனின் அதிகாரத்தின் கீழ் வரும். காவலர்கள் லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்கப்பட்டால், 8 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனையோ 12 மாதங்களுக்கான ஊதியம் அபராதமாகவோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக விதிக்கப்படும் என்பது மிக முக்கியமான சீர்திருத்தச் சட்டமாகக் கருதப்படுகிறது.கேரள மாநிலத்தில் காவல்துறை சட்டம் 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர், பல்வேறு வரவேற்கத்தக்க பரிந்துரைகளுடன் மாநில காவல்துறை சட்டம் மறு சீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment