Islamic Widget

October 16, 2010

அயோத்தி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முஸ்லிம் அமைப்பு முடிவு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி நில உரிமை தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் முடிவு செய்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சனிக் கிழமையன்று முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் 51 பேரும் இதில் கலந்து கொண்டனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நேரடியாகவோ அல்லது சுன்னி சென்ட்ரல் வக்ஃப் போர்டு மூலமாகவோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானபோது, இந்த தீர்ப்பு ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள இயலாது என்று முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஏற்கனவே கூறியிருந்தது.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை விட்டுத்தர இயலாது என்று சுன்னி சென்ட்ரல் வக்ஃப் போர்டும் ஏற்கனவே கூறியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனையைத் தீர்க்கவும் வழிகாணப்படும் என்றும் அந்த வக்ஃப் போர்டு கூறியிருந்தது.

இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமானால் அது ஷரீஅத் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் இவ்வழக்கின் வாதிகளில் ஒருவரான முஹம்மது ஹாஷிம் அன்சாரியின் மிரட்டல் இந்த வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் வக்ஃப் போர்டு ஏற்கனவே தெளிவாக்கியுள்ளது.


 Source: inneram.com

No comments:

Post a Comment