Islamic Widget

June 04, 2012

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 497 மதிப்பெண்கள் பெற்று தஞ்சை மாணவர் ஸ்ரீநாத் முதலிடம்

 Tamil Nadu Sslc Result Today சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தஞ்சை பி.ஆர். பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்தது. 11 லட்சத்து 68,000 மாணவ-மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தமிழகம் மற்றும் புதுவையில் பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். பழைய பாடத்திட்டத்தின் கீழ் 64, 777 பேரும், தனித் தேர்வர்களாக 19,574 பேரும் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகியது. இதில் தஞ்சை பி.ஆர். பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவர்கள் 2வது இடத்தையும், 495 மதிப்பெண்கள் எடுத்து 11 மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 86.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83.4 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 88.90. வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணிதப் பாடத்தில் இந்த ஆண்டு வெறும் 1,141 மாணவர்கள் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். அறிவியலில் 9,237 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு முடிவுகளை தமிழ் ஒன்இந்தியா இணையதளத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். மேலும்

http://www.tn.nic.in/tnhome/hscresult.html

http://www.tn.gov.in/dge/default.htm ஆகிய இணையங்களிலும் பார்க்கலாம்.

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் ஜூன் 21ம் தேதி வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்துப் பாடங்களுக்குமான மறுகூட்டல் விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) முதல் வியாழக்கிழமை (ஜூன் 7) வரை வழங்கப்படும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள் (சென்னை நீங்கலாக) இந்த விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் மொழி மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.305 ஆகும். பிற பாடங்களுக்கான மறுகூட்டல் கட்டணம் ரூ.205 ஆகும். இந்தக் கட்டணத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் கருவூல செலுத்துச்சீட்டின் மூலம் செலுத்தி அதற்கான ரசீதை இணைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மே 27ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment