Islamic Widget

March 08, 2012

யார் இந்த உதயகுமார் ?


சுப. உதயகுமார், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறார். இவரது எதிர்ப்புத் தீவிரம் அடைய, போராட்டமும் 175 நாட்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. "அணு உலை இயங்க வழியில்லை என்றால் எங்களது விஞ்ஞானிகள் இங்கு எதற்கு இருக்கவேண்டும்?..' என்று ரஷ்யா கேள்வி எழுப்புகிறது.
உதயகுமார் குறித்து பிரதமர் முதல், இணை அமைச்சர் நாராயணசாமி வரை அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? போராட்டச் செலவுகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் பெறுகிறார் என்றெல்லாம் புகார் தெரிவிக்கிறார்கள். உதயகுமார் ஒருபடி மேலே சென்று, பொய்ப்புகார்கள் கூறுகின்றவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்கிறார். எங்களுக்கும் வழக்குப் போடத் தெரியும் என்று அரசுத் தரப்பில் சவால் விடப்படுகிறது.

* பரபரப்புக்காளான சுப.உதயகுமார் யார்?

குமரிமாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் பறக்கை சாலை சந்திப்பையொட்டிய இசங்கைமணி வீதியை சேர்ந்தவர் உதயகுமார். நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் இளங்கலை கணிதம், கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலமும் கற்றவர்.

1989 ஆகஸ்டு முதல் 2001 ஜனவரி வரையில் அமெரிக்காவில் "சமாதான கல்வி'யில் முதுகலை பட்டம், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பி.எச்.டி. பட்டங்களையும் பெற்றவர். தொடர்ந்து மினசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக, ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது தந்தை எஸ். பரமார்த்தலிங்கம் ,சென்னை ஐசிஎப் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாயார் எஸ். பொன்மணி, தூத்துக்குடி மாவட்ட சமூக நலஅலுவலராக இருந்து ஓய்வுபெற்றவர்.

உதயகுமாரின் மனைவி மீரா. இவர்களுக்கு சூர்யா, சத்யா என்று இருமகன்கள். நாகர்கோவில் அருகே பழவிளையில் சாக்கர் மெட்ரிக் பள்ளியை உதயகுமார் அதன் தாளாளராக இருந்து நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் முதல்வராக மனைவி மீரா இருக்கிறார்.

பலமான குடும்ப பின்னணியும்,ஆழமான கல்விப் புலமும் கொண்ட உதயகுமார் பொதுப் பிரச்னைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நிகழ்வுகள் தூண்டுகோலாக அமைந்தது அவரிடம் பேசியதில் இருந்து தெரிந்தது.

* பொதுப்பிரச்னைக்காக போராடுவது என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்பட எது காரணமாக இருந்தது?

1981-87-ம் ஆண்டுகளில் எத்தியோப்பியாவில் ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். இந்த காலகட்டத்தில் 1985-ல் அந்நாட்டில் பெரும் வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நான் வாழ்ந்த நகர்ப்புறத்தையொட்டி உயிரிழப்புகள் அதிகம் இருந்தன. அவ்வாறு இறந்தவர்களின் உடல்களை ஒரே குழிகளில் போட்டு புதைப்பதையெல்லாம் நேரில் பார்த்து மனவேதனைப்பட்டிருக்கிறேன். உலகில் ஒருபுறம் செல்வசெழிப்புடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்க, மறுபுறம் பஞ்சத்தாலும் பட்டினியாலும் மக்கள் செத்து கொண்டிருந்தது என்னுள் பெரும் போராட்டத்தை உருவாக்கியது. எனக்குள் போராட்ட குணம் வந்ததற்கு இதையே விதையாக கருதுகிறேன்.

* அணுஉலை எதிர்ப்பு என்ற சித்தாத்தம் உங்களிடம் வருவதற்கு எது அடிப்படை?

கடந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவும், ரஷ்யாவும் படைத்தளம் அமைத்தது, அந்நாடுகளுக்குள் பனிப்போர் நிலவியது குறித்தெல்லாம் எனக்குத் தெரியவந்தது. ஒருவேளை நாடுகளிடையே போர் ஏற்பட்டு அணுஆயுதம் பயன்படுத்தப்பட்டால், இந்தியப் பெருங்கடலையொட்டிய நாடுகள் இல்லாமல்போகும் என்ற அச்சம் எனக்குள் இருந்தது. அணுஆயுதங்களால் ஏற்படும் பேரழிவுகளை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். இந்திய நிலமும், கடலும், இயற்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஜிபிஐஓ (குரூப் ஃபார் பீஸ்புல் இன்டியன் ஓசன்) என்ற அமைப்பை என்னைப்போன்ற சமூக ஆவலுள்ள இளைஞர்களுடன் இணைந்து அப்போதே ஏற்படுத்தினோம்.

மேலும் ஹவாய் தீவுப்பகுதியில் நான் ஆசிரியராக பணியாற்றிபோது நடந்த சம்பவங்களும் மிகப்பெரும் தூண்டுதலாக இருந்தது. ஹவாய் தீவுப்பகுதியில்தான் பிரான்ஸ் நாடு தனது அணுஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டது. இதனால் அங்குள்ள பூர்வீக குடிமக்கள் பாதிக்கப்பட்டனர். இயற்கையும் அழிந்தது. இதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்தன. அதில் நானும் பங்கேற்றிருந்தேன். அணுஆயுத பரிசோதனைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் வீதிவீதியாக சென்று விநியோகம் செய்துள்ளேன். கையெழுத்து இயக்கத்தையும் நடத்தியிருந்தேன்.

* கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் தாங்கள் ஈடுபடுவதற்கு ஆணிவேராக இருந்த சம்பவம் எது?

1988-ல் இந்த அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை ஒய். டேவிட் என்பவர் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போதே அதற்கு ஆதரவாகச் செயல்பட்டேன். 1998-ல் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்தபோது அணுஉலைக்கு எதிரான அமைப்பை குமரி மாவட்டத்தில் பீட்டர்தாஸ், மறைந்த அசுரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து தொடங்கி நடத்தினேன். அப்போதெல்லாம் கூடங்குளம் பகுதிக்குச் சென்றாலே மக்கள் எங்களை விரட்டுவார்கள். இந்த அனுபவம் பலமுறை ஏற்பட்டதுண்டு. காரணம், பேச்சிப்பாறை அணை நீரால் வளம் பெறும், வேலைவாய்ப்புக் கிடைக்கும் என அதிகாரிகள் நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருந்தனர். ஆனால் அப்போது எங்களது பேச்சு எடுபடவில்லை. கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்பர். 2001-ல் நவம்பர் 1-ம் தேதி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வலுவாக தொடங்கப்பட்டது.

* அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா?

நான் பிரபலமாகிவிட்டதாக பலர் நினைத்து இதை கேட்கிறார்கள். ஆனால் அத்தகைய எண்ணம் துளிக்கூட இல்லை. எம்.பி., எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை. இந்த ஆசையின் பின்னணியில் இயங்கவில்லை. மக்களையும் பயன்படுத்தவில்லை. ரூ.1000 கோடி கொடுத்தாலும்கூட அரசியலுக்கு வரமாட்டேன்.

* உங்களது நெடும் போராட்டத்துக்கு குடும்பத்தினர் மத்தியில் ஒத்துழைப்பு இருக்கிறதா?

குடும்பத்தினர் வேண்டாம் என்றே கூறுகிறார்கள். வயதான தந்தையும், தாயும் என்னைக் குறித்து மிகுந்த கவலைப்படுகிறார்கள். எதிர்ப்பாளர்கள் அதிகரித்திருப்பதால் நெடுந்தூரம் வாகனங்களில் செல்லாதே, அவ்வாறு சென்றால் மற்றொரு வாகனத்தை மோதவைத்து கொன்றுவிடுவார்கள் என்றும் எச்சரிக்கிறார்கள். அதையெல்லாம் மீறியே மக்களுக்கான போராட்டத்தை வழிநடத்துகிறேன்.

* உங்களது பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள்?

எப்போது போராட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வரப்போகிறீர்கள் என்பதுதான் பிள்ளைகள் என்னிடம் கேட்கும் கேள்வி. ஊடகங்களில் போராட்டம் தொடர்பான செய்திகளைக் கவனித்தவர்கள். நல்லதுக்குத்தானே போராடுகிறீர்கள்? அப்படியிருக்க, எதற்காக உங்களை அடிக்க வருகிறார்கள்? உருவபொம்மையை எரிக்கிறார்கள்? என்று எதிர்கேள்வி கேட்டு துளைத்தெடுக்கிறார்கள்.

* உங்களது போராட்டத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்?

இது மக்கள் போராட்டம்; வெற்றியுடன்தான் முடிவடையும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

No comments:

Post a Comment