Islamic Widget

March 14, 2012

இடைத் தேர்தல் முடிந்தவுடன் மின் கட்டணம் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணம் அமல்!

Bulb Blast by Kalimistuk சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன் இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்படவுள்ளது.

சமீபத்தில் பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவற்றை வரலாறு காணாத வகையில் உயர்த்தி சாதனை புரிந்தார் முதல்வர் ஜெயலலிதா. அதே போல மின் கட்டணமும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் இடைத் தேர்தல் வந்ததால் அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.முன்னதாக மின்சார கட்டணத்தை உயர்த்துமாறு தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் அரசு கேட்டுக் கொண்டது. எந்தெந்தப் பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்ற விவரத்தையும் மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த நவம்பர் மாதம் அரசு சமர்ப்பித்தது.

அதைத் தொடர்ந்து ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். அப்போது கட்டண உயர்வுக்கு பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனாலும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.

வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, சிறு தொழில்கள், குடிசை தொழில்கள் ஆகியவற்றுக்கு கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது.

மின் கட்டண உயர்வு குறித்த முறையீடு செய்து 120 நாட்களுக்குள் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் அடுத்த வாரத்துடன் 4 மாதங்கள் முடிவடைகிறது.

அத்தோடு சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடந்து முடிந்துவிடும் என்பதால், மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரலாம்.

தமிழகத்தில் கடைசியாக அதிமுக ஆட்சியில் தான் 2004ம் ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஓட்டுக்கு பயந்து கடந்த திமுக ஆட்சியில் மின் கட்டணமே உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் திமுகவுக்கு தேர்தலில் தோல்வியே கிடைத்தது

No comments:

Post a Comment