Islamic Widget

February 17, 2012

ஜெயலலிதா வழக்கு: 40வது முறையாக பரங்கிப்பேட்டையில் ஒத்திவைப்பு


கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புவனகிரி, புதுக்கோட்டை கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். ‘இதற்கு சட்டதில் அனுமதி இல்லை ’ எனக் கூறி தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பரங்கிப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
தேர்தல் விதிமுறை மீறிய வழக்கில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடந்த மாதம் 4ம் தேதி பிடிவாரன்ட் அப்போது பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்டாக பொறுப்பு வகித்த கோமதி சக்தி ஸ்வரூப் பிறப்பித்தார்.
பின்னர் மாஜிஸ்திரேட் கோமதி சக்தி ஸ்வரூப் மீது ஊழல் புகார் எழுந்தது, இப்புகார் குறித்து விளக்கம் கேட்டு நீதிபதி கோமதி ஸ்வரூப்-புக்கு சென்னை உயர்நீதி மன்றம் சம்மன் அனுப்பியும் அவர் விளக்கம் அளிக்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் மாஜிஸ்திரேட் கோமதி சக்தி ஸ்வரூப்பை , சஸ்பெண்ட் செய்ய சென்னை உயர் நீதிமன்ற ஆட்சி மன்ற நிர்வாகக் குழு சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்து பலமுறை விசாரணைக்கு வந்து, மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயச்சந்திரன், மூர்த்திகன் அருண்மொழிவர்மன், ஆகியோர் ஆஜராகி சுப்ரீம் கோர்ட்டில் இந்நிலையே தொடரவேண்டும் (ஸ்டேட்டஸ்கோ) என்ற உத்தரவு இருப்பதால், இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என வாதிட்டு அதற்கான உத்தரவு நகலை மாஜிஸ்திரேட்டிடம் வழங்கினர்.
இந்த வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பொறுப்பு வகிக்கும் ஈஸ்வரமூர்த்தி இந்த வழக்கை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கு விசாரணை 40வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment