தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் காய்கறி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் டவுன் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. ஆந்திராவில் இருந்து தக்காளி, பெங்களூர் மற்றும் ஓசூரிலிருந்து பீன்ஸ், முட்டைகோஸ், மேட்டுபாளையத்திலிருந்து கேரட், ஒட்டன்சத்திரத்திலிந்து கத்திரிக்காய் ஆகியவை லாரிகள் மூலம் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு நாள்தோறும் கொண்டு வரப்படுகிறது.
பின்னர் இங்கிருந்து கேரளா மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தொடர் மழை காரணமாக காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.20 க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.34 க்கும், பீன்ஸ் ரூ.24 லிருந்து ரூ.32 ஆகவும், கேரட் ரூ.30, பீட்ருட் ரூ.25, கோஸ் ரூ.20, காலிபிளவர் ரூ.30, பட்டர்பீன்ஸ் ரூ.80, சோயாபீன்ஸ் ரூ.50, வெண்டை, கத்தரி, உருளை ரூ.20, வெங்காயம் ரூ.35, பல்லாரி ரூ.20, மாங்காய் ரூ.50, பாகற்காய் ரூ.25, மல்லி இலை ரூ.40, முருங்கை ரூ.25, புதினா ரூ.30, இஞ்சி ரூ.35 க்கும் விற்கப்படுகிறது.இதுகுறித்து டவுன் மார்க்கெட் காய்கறி வியாபாரி கண்ணன் கூறும்போது, "தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆந்திரா, பெங்களூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறி கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழையினாலும் காய்கறிகள் அழுகி விடுகின்றன. பாவூர்சத்திரத்தில் தற்போது சீசன் இல்லை. உள்ளூரில் இருந்து காய்கறிகள் வருகின்றன. எனவே விலை உயர்வு தவிர்க்க முடியததாகி விட்டது" என்றார்.
No comments:
Post a Comment