Islamic Widget

October 07, 2011

போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 30 லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது.

சென்னையில் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரித்து, அதன்மூலம் கடந்த ஒரு மாதத்தில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னையி்ல் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரித்து, அதன்மூலம் குறிப்பிட்ட கும்பல் பலரது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் கிளை மேலாளரும் கமிஷனர் திரிபாதியை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தார்
கமிஷனரின் உத்தரவின்பேரில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரிப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றுமுன்தினம், அந்த வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான போலி ஏ.டி.எம். அட்டைகளும், கிரெடிட் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன. இவற்றை தயாரித்த உமேஷ்(27), ராஜேந்திரன்(49), திவ்யன்(24), உதயகுமார்(39), ஜெயக்குமார்(23) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், இந்த 5 பேர் கும்பலுக்கு தலைவராக இலங்கையை சேர்ந்த உமேஷ் செயல்பட்டுள்ளது தெரிந்தது. திவ்யன் மற்றும் ராஜேந்திரனும் இலங்கையை சேர்ந்தவர்கள். கனடாவில் மோசடியில் ஈடுபட்ட உமேஷின் தொல்லை தாங்க முடியாமல், அந்நாட்டு போலீசார் இலங்கைக்கு திரும்ப அனுப்பிவிட்டனர்.

இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த உமேஷ் தன்னோடு ஆட்களை சேர்த்து கொண்டு, பல மோசடி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக சிறை சென்ற உமேஷ், ஜாமீனில் வெளியே வந்தார். கோவிலம்பாக்கத்தில் மனைவி் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் உமேஷ், சீனாவில் உள்ள சிலரது உதவியால் ஸ்கிம்மர் கருவி ஒன்றை பெற்று கொண்டார்.

சென்னையில் ஆள் நடமாட்டம் மற்றும் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். சென்டர்களில் இந்த ஸ்கிம்மர் கருவியை பொருத்திவிடுவர். பின்னர் அதில் பதிவாகும் கார்டுகளின் விபரங்களை வைத்து, போலி கார்டுகளை தயாரித்து, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

கிடைக்கும் பணத்தில் பங்காளிகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, தானும் ஜாலியாக காலம் தள்ளி உள்ளார். இந்த கும்பல் கடந்த 1 மாதத்தில் மட்டும் 30 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்து உள்ளதாக தெரிகிறது.

அவர்களிடம் இருந்து போலி கிரெடிட் கார்டுகள் மற்றும் ஏ.டி.எம். அட்டைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், என்கோடர் உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

No comments:

Post a Comment