ராலேகான்: லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களை தூக்கிலிட வேண்டும் என்று காந்தீயவாதி அன்னா ஹசாரே ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில், வாக்களிப்பதற்கோ அல்லது கேள்விகள் கேட்பதற்கோ லஞ்சம் வாங்கும் உறுப்பினர்களை தயவு தாட்சண்யமின்றி தூக்கிலிட வேண்டும் என்று அண்ணா ஹசாரே கூறியிருக்கிறார்.
மக்களவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக அமர்சிங் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அண்ணா ஹசாரே இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் ராலேகான் சித்தியிலுள்ள பத்மாவதி கோயிலுக்கு ஹசாரே செவ்வாய்க்கிழமை வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கவும் வாக்களிக்கவும் லஞ்சம் பெறும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை இப்படிப்பட்டவர்களைத் தூக்கிலிட வேண்டும்' என்றார்.
ஊழலுக்கு எதிரான வலுவான சட்டத்தைக் கொண்டுவந்தால், இவர்களைப் போன்றவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். நடாளூமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேர்மையாக விசாரணை நடத்தினால், நமது அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகள் தெரியவரும் என்றவர் தனக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடனும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment