கடலூர் : கடலூர் பஸ் நிலையத்தில் தூங்கிய பூ வியாபாரியிடம் 17 ஆயிரம் ரூபாயை திருடியதாக போதை ஆசாமியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலூர் அடுத்த வி.காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 24. பூ அலங்கார வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் மாலை மயிலாடுதுறையில் திருமண மேடை அலங்கரித்து விட்டு நள்ளிரவு கடலூருக்கு வந்தார்.வீட்டிற்குச் செல்ல பஸ் இல்லாததால், பஸ் நிலையத்திலேயே தூங்கி விட்டார். அதிகாலை எழுந்து பார்த்தபோது அவர் சட்டை பையில் வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏ.டி.எம்., கார்டு திருடு போயிருந்தது.திடுக்கிட்ட பாக்கியராஜ் அப்பகுதியில் இருந்த தனது நண்பர்களுடன் பஸ் நிலையத்தில் தேடினார்.
அப்போது பஸ் நிலையம் பின் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே இரண்டு வாலிபர்கள் போதையில், பணக்கட்டை யாரிடம் கொடுத்தாய் என பேசிக் கொண்டனர். இதைக்கேட்ட பாக்கியராஜ் மற்றும் அவரது நண்பர்கள், அந்த போதை ஆசாமிகள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த அய்யப்பன், சிவக்குமார் எனவும் ஓட்டலில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இரவு பஸ் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாக்கியராஜ் சட்டைப் பையில் இருந்த பணத்தை திருடி ஆட்டோவில் புதுச்சேரி மாநிலம் முள்ளோடை சென்று குடித்ததாகவும், மீதிப் பணத்தை பிராந்தி கடையில் இருந்த புகழேந்தி என்பவரிடம் கொடுத்துவிட்டு வந்ததாகவும் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இருவரின் கை, கால்களை கட்டிப் போட்டு சரமாரியாகத் தாக்கினர்.பின்னர் இருவரையும் பஸ் நிலையத்தில் கட்டிப்போட்டு விட்டு, புகார் கொடுக்க பாக்கியராஜ் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். இதற்கிடையே பொதுமக்களால் கட்டிப் போடப்பட்ட அய்யப்பன் தனது கட்டுகளை அவிழ்த்தார். அதனைக் கண்ட பொதுமக்கள் அவரை பிடிக்கச் சென்றபோது பீர் பாட்டிலை உடைத்து, பிடிக்க முயன்றால் குத்திக் கொலை செய்து விடுவேன் என மிரட்டியபடி தப்பியோடினார். இச்சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று, அங்கு பொதுமக்களால் கட்டிப் போடப்பட்டிருந்த வாலிபர் சிவக்குமாரை மீட்டுபோலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர் கூறிய தகவலின் பேரில் முள்ளோடையைச் சேர்ந்த புகழேந்தி என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய அய்யப்பனை தேடி வருகின்றனர்.
Source: dinamalar
No comments:
Post a Comment