Islamic Widget

February 11, 2011

வெளிநாட்டு வாழ் தமிழர் நலக் குழுமம் - மசோதா தாக்கல்!

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு உதவ புதிய குழுமம் ஒன்றை ஏற்படுத்த வகை செய்யும் மசோதா சட்டசமன்றத்தில் வியாழக் கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி சார்பில் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:


"வரலாற்றின்படி தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும் படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின் பொருட்டும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பொருளாதார காரணங்களுக்காகவும் பொருளாதாரம் உலகமயமாக்கப்பட்டதன் காரணமாகவும் வேலை தேடி அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அயல்நாடுகளுக்கும் தொடர்ந்து இடம் பெயர்ந்து சென்று கொண்டு இருக்கின்றனர்.இதன் காரணமாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாட்டை வாழ்விடமாக அமைத்துக் கொள்ளாத, வேலையில் இருக்கும்போதும் அதற்கு பிறகும் தாயகத்திலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்சினைகளையும், சட்ட பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பெற்று வந்து வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி செல்ல தன்னைச் சார்ந்து இருப்பவர்களை தமிழ்நாட்டில் விட்டுவிட்டு வேலை தேடிச்செல்வோர் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இதற்கு அவர்களால் தீர்வு காணவும் முடியவில்லை.எனவே தமிழ்நாட்டை வாழ்விடமாக அமைக்காத தமிழர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்குவது முக்கிய கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது.வெளிநாட்டில் இறக்கும் தமிழர்களின் உடல்களைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்ப தேவைப்படும் நிதிஉதவி வழங்குவதோடு, அதன்பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளைத் தீர்வு செய்தாலும் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்தக் குறைகளைத் தீர்க்கவும், அவர்கள் தொடர்பு கொள்வதற்குத் தமிழக அரசின் கீழ் தனியாக ஒரு அமைப்பு இல்லாத பெரிய குறையாக உள்ளது.
எனவே வெளிநாடு, வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி அதன்கீழ் ஒரு நலநிதியத்தை ஏற்படுத்தி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி நிர்வகிக்க ஒரு குழுமத்தையும் நிறுவ உள்ளோம். இந்த நோக்கத்திற்காக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது என முடிவு செய்துள்ளது."
இவ்வாறு சட்ட முன் வடிவில் கூறப்பட்டு உள்ளது.
 
Source: inneram

No comments:

Post a Comment