Islamic Widget

January 30, 2011

புதுவை முக்கிய செய்திகள்!

புதுச்சேரி, ஜன. 28: புதுச்சேரி முன்னாள் முதல்வர் என். ரங்கசாமிக்கு ஆதரவாக திமுகவைச் சேர்ந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவர் சுகுமாறன் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்து தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை உள்ளாட்சித் துறை இயக்குநர் திரு. பாலசுப்பிரமணியத்திடம் அவர் அளித்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார். புதியக் கட்சி தொடங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக சுகுமாறன் பதவி விலகியுள்ளார்.

காவல்துறை உதவி ஆய்வாளர் உடல் தகுதி தேர்வு பணி பாதிப்பு!

புதுவையில் நடந்து வரும் காவல்துறை உதவி ஆய்வாளர் உடல் தகுதி தேர்வில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு பணி பாதிக்கப்பட்டது. புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 41 உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு ஆள் தேர்வு நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.இப்பதவிகளுக்காக 5082 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தேர்வுகள் இ-ரெக்ரூட்மெண்ட் முறையில் நடத்தப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி விண்ணப்பங்கள் பெரும்பாலும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட்டது. உடல் தேர்வுகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த நவீன தேர்வுக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த இ-சாப்ட் நிறுவனத்துக்கு ரூ.8 லட்சத்தை புதுவை காவல்துறை அளிக்க இருக்கிறது.

புதுவை பள்ளியில் ஓவியப்போட்டி!

புதுவை எல்லோரா ஓவியப் பள்ளி சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது.
புதுச்சேரி பயோ இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கட்டட வளாகத்தில் நடந்த விழாவில், புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் மு.இளையராஜா கலந்து கொண்டு, ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் எல்.வி.லிங்கிதா, சி.ஓவியா, எம்.ரம்யா, ஆர்.திவ்யா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார்.

மூத்த குடிமக்களுக்கான, சிறப்பு டிபாசிட் அறிமுக விழா!

புதுவை ரெப்கோ வங்கியில் மூத்த குடிமக்களுக்கான, சிறப்பு டிபாசிட் அறிமுக விழா நடந்தது. இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கி, தென்னக மாநிலங்களில் 74 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இவ் வங்கியில் மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு டிபாசிட் அறிமுக விழா புதுச்சேரி அண்ணா சாலை கிளையில் நடந்தது.
புதிய திட்டத்தை, வங்கியின் பொது மேலாளர் திருவேங்கடம் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில், மூத்த குடிமக்கள் டிபாசிட் செய்யும் தொகைக்கு 15 மாதங்களுக்கு 10 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 9.5 சதவீத வட்டியும் வழங்கப்படுவதாகவும், இத் தொகைக்கு மாதாந்திர, மூன்று மாதத்திற்கு ஒருமுறை வட்டி பெறும் வசதி உள்ளதாகவும், இத்திட்டம் குறுகிய காலமே உள்ளதால் பொதுமக்கள் டிபாசிட் செய்து பயன் பெறுமாறு பொது மேலாளர் தெரிவித்தார்

 
Source:inneram

No comments:

Post a Comment