பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பு.முட்லூரில் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கடந்த 31ம் தேதி பு.முட்லூரில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களிடம், அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம் என வருவாய்த் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், மஞ்சக்குழி பகுதிகளில் கணக்கெடுத்தனர். ஆனால் கணக்கெடுத்ததை விட குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று பு.முட்லூர் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தத்தில் மா.கம்யூ., வடக்கு வட்ட செயலர் சண்முகசுந்தரம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் நேரடியாக வர வேண்டும் என கோரிக்கை வைத்ததால் தாசில்தார் காமராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இன்னும் இரண்டு நாட்களில் ஏற்கனவே எடுத்த கணக்கெடுப்பின்படி நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 10.50 முதல் மதியம் 12.10 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 40 பேர் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் தாசில்தார் பன்னீர்செல்வம் முறைப்படி தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் மறுபரிசீலனை செய்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து 4.15 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.
source: dinamalar
No comments:
Post a Comment