கடந்த மாதம் ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெங்காயப் பயிர்கள் அழுகி சந்தைக்கு வரத்துக் குறையவே வெங்காய விலை விண்ணை முட்டியது. அரசும் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்தும் பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தும் விலைக் குறைப்புக்கு முயன்றது. அரசால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அடுத்த நாளிலேயே மார்க்கட்டில் வெங்காயத்தின் விலை 80 சதம் அளவுக்கு அதாவது கிலோ 20 ரூபாய்க்கு இறங்கி தொடர்ந்த நாட்களில் மீண்டும் பழையபடி சிகரத்தை எட்டியது. ஏற்றுமதிக்குத் தடையும் இறக்குமதிக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்ட நிலையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காயம் உடனடியாக மார்க்கட்டிற்கு ஒரே நேரத்தில் வந்ததன் விளைவுதான் இது என காரணம் கூறப்பட்டது. ஸ்டாக் தீர்ந்து விட்ட நிலையில் மீண்டும் வெங்காயத்தின் விலை ரூ 100 ஐக்கடக்கும் நிலையிலேயே தற்போது உள்ளது. வெங்காய விலை விண்ணை முட்டிய நிலையில் தக்காளியும் நான் என்ன சாமானியனா என்று கேட்கும் அளவுக்கு வரலாறு காணாத விலையேற்றம் கண்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெருத்த சேதம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, விவசாயத்துக்காக வாங்கிய கடனைத் திருப்பி அளிக்க முடியாத நிலையில் இரு விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ள விவசாயிகள் குறித்துக் கவலை கொள்ளாத மகாராஷ்டிரா அரசு பணம் கொழிக்கும் ஐபிஎல் போன்ற போட்டிகளுக்கு வரி விலக்கு அளித்துச் செல்வந்தர்களைத் திருப்திப் படுத்தி வருகிறது.
அணு உலை முதலீட்டில் பெரும் பணத்தைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் சில தனியார் நிறுவனங்களுக்கும் சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக அணு உலை விபத்துக் காப்பீடு என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தைச் செலவு செய்யத் திட்டம் தீட்டும் மத்திய அரசு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும் பட்டினியாலும் தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் படுவதில்லை.
Source:.inneram
No comments:
Post a Comment