Islamic Widget

October 06, 2010

தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் மீதான தடை ரத்து: உயர் நீதிமன்றம்

தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கல்விக் கட்டண நிர்ணயம் செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்தக் குழுவின் கட்டண நிர்ணயத்துக்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்தார்.
பெற்றோர்களின் கருத்தைக் கேட்காமல் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தடையை நீக்க வேண்டும் என்றும் கோரி பெற்றோர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தமிழக அரசும் இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கில் பெற்றோர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராயினர்.
தனியார் பள்ளிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமாரசாமி, வி.பி.செங்கோட்டுவேல் உள்ளிட்டோர் ஆஜராயினர்.
பெற்றோர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை சாதகமாகக் கொண்டு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர்.

தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதி குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மிகவும் குறைவானது. இதில் பள்ளிகளை நடத்த முடியாது. கட்டண நிர்ணயத்துக்கு எதிராக நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் 6 ஆயிரம் பள்ளிகள் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. எனவே, இதை அனுமதிக்கக் கூடாது என்று கோரினர்.

மனுக்களை விசாரித்த பிறகு நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

முதற்கட்ட ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்ட பிறகு, ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்ற நிலையிலேயே இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும்.
இந்த வழக்கில் தனி நீதிபதி வழங்கியுள்ள இடைக்கால உத்தரவாபொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி குழு நிர்ணயித்த கட்டணத்தை அமல்படுத்திய பள்ளிகள் கூட, இடைக்கால உத்தரவுக்குப் பிறகு கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் தனித்தனியாக கட்டண நிர்ணயம் செய்துள்ளது. ஒரு சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான பள்ளிகள் தனியாக நீதிமன்றத்தை நாடவில்லை. கல்விக் கட்டண நிர்ணயமும் பொதுவாக இல்லை. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கட்டண நிர்ணயத்தை பொதுவாக எதிர்க்க முடியாது.
அதேபோல், நீதிபதிகள் குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளும் மேல்முறையீட்டை தொடரவே விரும்புகின்றன. மேல்முறையீட்டு மனுக்கள் மீது முடிவு எடுக்கும்போது தங்களது தரப்பை முழுமையாகக் கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.
நீதிபதி கோவிந்தராஜன் குழு தமிழகம் முழுவதும் உள்ள 10,934 தனியார் பள்ளிகளுக்கும் கேள்விகள் அடங்கிய பட்டியலை அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையிலேயே கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. எனவே, இயற்கை நியதிக்கு முரணாக, எதிர் தரப்புக்கு வாய்ப்பளிக்காமல் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற தனி நீதிபதியின் கருத்து தவறானது ஆகும்.
பள்ளி கட்டண நிர்ணயத்துக்கு தனி நீதிபதி தடை விதித்த பிறகு, கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரை பள்ளிகள் வற்புறுத்தியுள்ளன. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளின் இந்த செயலை அனுமதிக்க முடியாது.
கட்டண உயர்வை எதிர்க்காத பள்ளிகளுக்கும் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார். இதுபோன்ற உத்தரவை அவர் வழங்கியிருக்க வேண்டியதில்லை.
இந்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் பார்க்கும்போது, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு சட்டப்படி சரியானது அல்ல. எனவே, இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


Source: dinamani

No comments:

Post a Comment