Islamic Widget

October 28, 2010

வீதிகள் திறந்த வெளி 'பார்'களாக மாறி வரும் விபரீதம் : போலீசாரின் நடவடிக்கை அவசியம் தேவை

பரங்கிப்பேட்டை : குடி பிரியர்கள் வீதிகள், குடியிருப்பு பகுதிகளையும் திறந்த வெளி 'பார்'களாக பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் மவுனம் காத்து வருவதால் தேவையற்ற பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கவும், அரசுக்கு வருமானத்தை பெருக்கிட கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அரசு சார்பில் 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டன. குடிபிரியர்களின் வசதிக்காக கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு 'டாஸ்மாக்' கடைகளின் அருகிலேயே 'பார்' துவங்கப்பட்டது. இதனால் குடிபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கிக் கொண்டு அருகில் உள்ள 'பார்'களில் அமர்ந்து குடித்து விட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.
இந்நிலையில் அரசு 'டாஸ்மாக்' கடைகளில் 'பார்' நடத்துவதற்காக டெண்டர் தொகையை அந்த கடையின் ஆண்டு விற்பனையில் 2.5 சதவீதமாக உயர்த்தியதால் டாஸ்மாக் கடைகளில் 'பார்' நடத்த எவரும் முன்வரவில்லை. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 231 'டாஸ்மாக்' கடைகளில் 54 கடைகளில் மட்டுமே 'பார்' இயங்கி வருகிறது. 177 கடைகளில் 'பார்' இல்லாததால், குடிபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் தங்களுக்கு வேண்டிய சரக்குகளை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகளில் நொறுக்குத் தீனி, வாங்கிக் கொண்டு பஸ் நிறுத்தம், பள்ளிகள், சத்துணவு கூடங்கள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் நகர விரிவாக்க பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து 'ஹாயாக' குடிக்கின்றனர்.
இவ்வாறு குடிப்பிரியர்கள் கும்பலாக அமர்ந்து குடிக்கும் போது அருகில் வீடுகள் இருப்பதை பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசிக் கொள்வதால் வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் வீதிகளில் குடிக்கும் குடிப்பிரியர்கள் போதை ஏறி தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. குடிப்பிரியர்கள் அடிக்கும் கொட்டத்தை பொறுக்க முடியாமல், அருகில் உள்ளவர்கள் தட்டிக் கேட்டால், அரசு ஒயின் ஷாப் திறந்துள்ளது, நாங்கள் எங்கு சென்று குடிப்பது என நக்கல் கேள்வி கேட்டு தகராறு செய்கின்றனர். இதற்கு பயந்தே எவரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லை.
இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் குடிபிரியர்கள் சமீப காலமாக விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களிலேயே குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கின்றனர். இவ்வாறு பொது இடங்களில் குடித்து விட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குடிபிரியர்களை போலீசார் கண்டிக்கா விட்டால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனை உணர்ந்தாவது பொது இடங்களில் குடிப்போர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source: Dinamalar - Photo: mypno

No comments:

Post a Comment