சென்னை: அயோத்தி விவகாரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இரட்டை நாக்குடன் பேசுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடம் ராமன் பிறந்த இடம் என்று சொல்லப்பட்டதால், நம்பப்படுவதால் அங்கே ராமனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம்?, பாபர் மசூதி பாதுகாப்பு க் குழுவுக்கா?, அல்லது ராமன் கோயில் கட்ட விழையும் குழுவுக்கா? என்பதற்கான வழக்கில் கடந்த (60 ஆண்டுகளுக்குப் பின்) 30.9.2010 அன்று லக்னோவில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தனித்தனித் தீர்ப்புகளைக் கூறிவிட்டது!.
பொதுவாக இந்தத் தீர்ப்பு ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆக உள்ளதே தவிர, சட்டத்தின் அடிப்படையில், சாட்சியங்களையோ, முக்கிய ஆதாரங்களையோ அலசி ஆராயாமல், நீண்ட கால மக்கள் நம்பிக்கை மத நம்பிக்கை என்ற அடிப்படையில் அமைந்துள்ளது என்று பிரபல சட்ட வல்லுநர்கள் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான், பி.பி. ராவ் போன்றவர்கள் தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்!.
காரணம், மூன்று பாகமாக அந்த நிலத்தைப் பிரித்து மூன்றில் ஒரு பாகம் பாபர் மசூதி குழுவினருக்கு; மீதி இரண்டும் இரு பாகம் இந்து அமைப்புகளிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும். மூன்று மாத கால அவகாசம் அப்பீல் செய்வதற்கு என்று தெரிவிக்கப்பட்டது.
பாபர் மசூதி கட்டிய இடம் ராமன் பிறந்த இடம்தான் என்று மக்கள் நம்புவதால், அதனை ஏற்கவேண்டும் என்று நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பைக் கூறிவிட்டனர்!.
தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் சர்வே கண்டுபிடிப்புகள் அடிப்படையிலோ அல்லது வரலாற்றுச் சான்றாதாரங்கள் அடிப்படையிலோ இந்தத் தீர்ப்பு எழுதப்படாமல், வெறும் மக்கள் நம்பிக்கை அடிப்படையைக் கொண்டு எழுதப்பட்டதால், இது வருங்காலத்தில் பல வீண் வம்பு, வல்லடி வழக்குகளை உண்டாக்கக் கூடிய அபாயப் போக்குக்கு வித்திட்டிருக்கிறது என்பதை நாம் முன்பு எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
இதே கருத்தை துணிச்சலாக அறிவு நாணயத்துடன் ரொமிலா தாப்பர் என்ற பிரபல மூத்த வரலாற்று ஆசிரியரும் மற்றும் பல்வேறு பொது அறிஞர்களும் ஓர் அருமையான கூட்டறிக்கையைத் தந்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஊட்டியுள்ளனர்!.
இது மதச்சார்பின்மை என்ற நமது அரசியல் கட்டமைப்பின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ள தீர்ப்பு என்பதை அந்த வல்லுநர்கள், அறிஞர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
1949ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவோடு இரவாக, பாபர் மசூதிக்குள் ராம் லல்லா என்ற சிறு குழந்தை ராமனின் 3 சிலைகளை, பாபர் மசூதி மத்திய 'டூம்' பகுதி அடிப்பகுதியில் வைக்கப்பட்ட சட்ட விரோதச் செயல் பற்றியோ (அப்போதைய பிரதமர் நேரு இந்தச் சிலைகளை அகற்றுமாறு வலியுறுத்தி, எதிர்காலத்தில் இது அபாயத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லும் என்று கூறி, உ.பி. முதல்வர் பண்டிட் கோவிந்தவல்லப பந்த் (பார்ப்பனர் இவர்) கடிதம் எழுதியும், அவர் அகற்ற போதிய நடவடிக்கை எடுக்காததோடு, அயோத்தியா பகுதி அதிகாரி நய்யார் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சிலையை அகற்றினால், அது பொதுமக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்று நய்யார் மூலமாக சாக்குபோக்கு கூறினார். இந்த அதிகாரி நய்யார் பிறகு ஜனசங்க எம்.பி ஆனார், ஓய்வு பெற்ற பிறகு!. இவர் எப்படிப்பட்ட இந்துத்துவா வெறியர் என்பதற்கு இது ஓர் ஆதாரம் போதாதா?)
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சட்ட விரோத குற்றத்தைப் பற்றியோ ஏதும் கூறாமல் அமைந்துவிட்டது இத்தீர்ப்புகள்.
லிபரான் ஆணையத்தின் குற்றவாளிகள் மிகப் பெரியவர்கள்; அதுபற்றி இனி என்ன ஆகப் போகிறது?. செலவிட்ட மக்கள் பணம், தேடிய நீதி எல்லாம், வாதாபி ஜீரணாபி என்ற பெரு ஏப்பம்தானோ!.
அந்தக் குற்றவாளிகள் எல்லாம் இப்போது மாபெரும் ஹீரோக்கள்!.
சங்கரராமன் கொலைக் குற்றவாளியாகிய காஞ்சி சங்கராச்சாரியார் திடீரென மத்தியஸ்தம் செய்ய அயோத்திக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டதுபோல, இரு சாராரும் சமரசம் செய்துகொள்வது பற்றி இதோபதேசம் கூறுகிறார்!.
இவர் முன்பு போய் மூக்கறுபட்டு திரும்பியதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பு அவருக்கு! (மக்கள் மறதிதானே பலருக்கு மூலதனம்?).
அவரை நோக்கி செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று நிரூபித்து விட்டார். நீதிமன்றம் முன்பு கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவரான லோக குரு!.
இந்த வழக்கில், முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா என்பது பத்திரிகையாளர்களின் கேள்வி.
அதை ''முஸ்லிம்களே விரும்பமாட்டாளே, அவாளுக்குத்தான் அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளனவே. அதனால் இன்னொரு மசூதியைக் கட்ட அவாள் விரும்பமாட்டா!'' என்று பதில் தந்துள்ளார்.
மேலும் அவர், முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும்! என்று கூறியுள்ளார்.
என்னே தந்திரம், சூழ்ச்சி! ராமனுக்கு ஏற்கெனவே அயோத்தியில் 700 கோயில்கள் உள்ளன என்று பிரபல வீக் வார ஏடு ஒரு சிறப்புக் கட்டுரையே முன்பு வெளியிட்டுள்ளதே!.
மேலும் ராமன் இருக்குமிடம் எல்லாம் அயோத்தி என்பதுதானே பழமொழி. அப்புறம் புதிதாக ராமனுக்கு சர்ச்சைக்கு இடையில் ஏன் புதிய கோயில்? சகிப்புத் தன்மைக்கே(?) பேர் போன இந்து மதவாத தத்துவகர்த்தா சங்கராச்சாரியார் ஏன் இப்படி இரட்டை நாக்குடன் பேசுகிறார்?.
பேச்சுவார்த்தை என்ற சாக்குக்காட்டி 1949ம் ஆண்டு செயலை நாட்டி நாட்டில் மீண்டும் கலவரத்தைத் தூண்டிட தூபம் போடப்படுகிறதோ என்ற அய்யம்தான், அமைதி விரும்புவோர், நடுநிலையாளர்கள் உள்ளத்தில் எழக்கூடும்.
சமாதானப் பேச்சு நடைபெறுகிறது என்ற தலைப்புப் போடும் ஏடுகளில் குறிப்பாக ஆங்கில நாளேடுகளில் ராமஜென்ம பூமியின் சார்பாக கோயில் கட்டத் துடிக்கும் நிருத்திய கோபால்தாஸ் (இப்போது இவர்தான் ராமச்சந்திர தாசுக்குப் பிறகு ராமஜென்ம பூமி நியாஸ் தலைவர்) கூறுகிறார், 'கடவுள் ராமர் எப்படி மூன்றில் ஒரு பாக நிலத்தில் வசிக்க முடியும்?''. அடடா என்ன அறிவுள்ள கேள்வி!.
கல்யாண் சிங் (இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் குற்றவாளிகளில் ஒருவர் இவரும்!) பிரதமருக்குக் கடிதம் எழுதி, 67 ஏக்கர் நிலத்தையும் ராமன் கோயில் கட்டுவதற்குக் கொடுத்து விடவேண்டும் என்று கோரியுள்ளார்!.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் குருமூர்த்தி அய்யர் எழுதுகிறார்:
''மூன்றில் ஒரு பங்குகூட எப்படி பாபர் மசூதி குழுவினருக்குக் கொடுப்பது, அது அநியாயம் அல்லவா'' என்கிறார்!.
இப்படி உள்ளவர்கள் சமாதானப் பேச்சு என்றால், அது சிங்கள ராஜபக்சே செய்த சமாதானப் பேச்சுபோல ஆகிவிடாதா?.
வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வது பிரச்சனைக்குச் சட்டத் தீர்வு காணப்படவேண்டும் என்ற அவாவுடன் இருப்பினும், 25bது அரசியல் சட்ட விதிக்கே தவறான வியாக்கியானம் தந்த அலகாபாத் தீர்ப்பின் அபாயமாவது குறைய வழி ஏற்படக்கூடும்.
சட்டப்படி தீர்க்கவேண்டிய வழக்கை, வெறும் நம்பிக்கை அடிப்படையில் வைத்து, அது மேலும் பல புதிய கலவரப் பூமிகளை உருவாக்க வழிவகை செய்வதை முதலில் தடை ஆணை வழங்கியாவது அப்பீல் நடப்பது அவசியமாகும்!.
இன்றைய எக்ஸ்பிரஸ் நாளேட்டில் சுப்பிரமணிய சாமி எழுதியுள்ளார். பச்சைப் பார்ப்பன சூழ்ச்சியாளர்கள் பகிரங்கமாகக் கிளம்பிவிட்டார்கள்!. அடுத்து மதுரா, கிருஷ்ணன் அவதரித்த பூமி, காசி வாரணாசி ஆகியவைகளில் உள்ள மசூதிகளையும் அகற்ற வேண்டும் என்ற பழைய ஓய்ந்த குரலுக்குப் புது வலிமை வந்து விட்டதாகக் காட்டுகின்றனவே.
இவர்களைவிட நாட்டில் வேறு பயங்கரவாதிகள், கலவரம் தூண்டுவோர் வேறு எவர் உளர்?.
ஏற்கெனவே 1993ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு விரோதமாக இந்தப் பேச்சு உள்ளதால், உள்துறை இத்தகையவர்கள்மீது தேசியப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?. அமைதி காக்க இது அவசியம் அவசரம்!
அலகாபாத் தீர்ப்பு கட்டப் பஞ்சாயத்து ஆக இருந்தபோதிலும், நாட்டில் அமைதி தவழுவதற்கு ஒரு மூல காரணம், இந்த 2010 என்பது 1992 அல்ல என்பதுதான்; அதாவது மக்களின் பெரும்பகுதியினர் அவர்கள் எம்மதத்தினராயினும் சரி மதவெறிக்கு முன்னுரிமை தராமல், மனிதநேயத்திற்கும், சகோதரத்துவத்திற்குமே முதலிடம் தந்து, மனிதத்தை நிலை நிறுத்தும் உயர் பக்குவத்தை நோக்கி முன்னேறுகின்றனர் என்பதன் காரணமாகவே ஆகும்!
இனிமேல் எவரும் மதவெறியைத் தூண்டி, அரசியல் லாபம் பெற்று ஆட்சிகளைப் பிடிக்க நினைத்தால் அது முடியாத காரியம். மனிதனுக்கு முதுகில் மூன்றாவது கை முளைப்பது போன்ற முடியாத செயலாகும்.
இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Source: thatstamil
No comments:
Post a Comment