Islamic Widget

October 30, 2010

தேர்தலுக்காக விரைவில் பொதுத் தேர்வு:மாணவர், பெற்றோர் கலக்கம்

கடலூர்: சட்டசபை தேர்தல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருவதால், தேர்விற்கு போதிய கால அவகாசம் இருக்குமோ என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழக கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்பிற்கு மார்ச் முதல் வாரத்தில் தேர்வுகள் துவங்கி அந்த மாதத்திற்குள் முடிக்கப்படும்.

அதேபோல் 10ம் வகுப்பிற்கு மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படும். கடந்த (2009-10) கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி 23ம் தேதியும், 10ம் வகுப்பு மற்றும் ஓ.எஸ்.எஸ்.எல்.சி., மார்ச் 23ம் தேதி துவங்கி ஏப்ரல் 7ம் தேதியும், மெட்ரிக் பிரிவிற்கு மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதிவரை நடத்தப்பட்டது. பிளஸ் 2 விற்கான எட்டு தேர்வுகளை 23 நாளும், 10ம் வகுப்பு மற்றும் ஓ.எஸ்.எஸ்.எல்.சி.,கான 7 தேர்வுகளை 16 நாளும், மெட்ரிக் பிரிவிற்கான 10 தேர்வுகளை 18 நாளிலும் நடத்தியதால் ஒவ்வொரு தேர்விற்கும் இடையில் விடுமுறை இருந்ததால் மாணவர்கள் அடுத்த தேர்விற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வசதியாக இருந்தது.

ஆனால், இந்தக் கல்வி ஆண்டில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே (மார்ச் இறுதிக்குள்) நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு பொதுத் தேர்வை தேர்தலுக்காக அவசரமாக நடத்தினால், தேர்வு நடைபெறும் மொத்த நாட்கள் குறையும் அபாயம் உள்ளது. இதனால் ஒவ்வொரு தேர்விற்கும் இடையே விடுமுறை நாட்கள் ஏதுமின்றி தொடர்ச்சியாக நடத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்விற்கு படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதால், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் பாவம்: பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடங்கள் அரையாண்டு தேர்விற்குள் நடத்தி முடிக்கப்படும். அதன்பிறகு பாடங்கள் "ரிவிஷன்' செய்யப்படும். தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை "கிறிஸ்துமஸ்' விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். ஆனால் அரசு பள்ளிகளில் பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் இறுதியில் துவங்கி ஜனவரி இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படும்.

தற்போது சட்டசபை தேர்தலுக்காக பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தினால் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜனவரி மாத இறுதியில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி நடத்தினால், டிசம்பரில் அரையாண்டு தேர்வு முடித்த தனியார் பள்ளி மாணவர்கள் அடுத்த ஒரு மாதத்தில் பொதுத் தேர்விற்கு ஆயத்தமாக கால அவகாசம் உள் ளது. ஆனால் அரசு பள்ளிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு எழுதி பொங்கல் விடுமுறை முடிந்ததும் செய்முறைத் தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. இதனால் எழுத்துத் தேர்விற்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை. இந்த ஏற்றத் தாழ்வுகளால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறையும்.
 
Source: Dinamalar

No comments:

Post a Comment