ஹைதராபாத், அக்.22: ஹஜ் விசாவில் சவூதி சென்று தர்மசங்கடத்துக்கு ஆளான ஆந்திர சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது அகமதுல்லா இன்று நாடு திரும்பினார்.
நாடு திரும்பும்போது ஜெத்தா விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்த அமைச்சர் அதுபோன்று செய்திகளை வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மெக்கா பயணம் மேற்கொள்பவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவே சவூதி சென்றதாக அகமதுல்லா தெரிவித்தார்.
மனைவி மற்றும் இரு மகன்களுடன் சென்ற சவூதி சென்ற அமைச்சர், எந்த விதியையும் தாங்கள் மீறவில்லை; ஜெத்தா விமானநிலையத்தில் தாங்கள் தடுத்து நிறுத்தப்படவும் இல்லை எனத் தெரிவித்தார்.
அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் சவூதியில் இருந்து இந்தியா திரும்ப முயன்றபோது, ஹஜ் விசாவில் சென்றதால் யாத்திரை முடியும்வரை சவூதியில் இருக்க வேண்டும் என ஜெத்தா விமானநிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக முன்னதாக செய்தி வெளியானது.
சவூதி விதிகளின்படி ஹஜ் விசாவில் வரும் எவரும் யாத்திரை முடியும்வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது. ஹஜ் யாத்திரை நவம்பர் 2-வது வாரத்தில் தொடங்கி டிசம்பரில் முடிவடைகிறது. அகமதுல்லாவும், அவரது குடும்பத்தினரும் அக்டோபர் 15-ம் தேதி ஹஜ் விசாவில் சவூதி சென்றனர். ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளைச் செய்ய அலுவல்ரீதியாக வரும்போது ஏன் ஹஜ் விசாவில் செல்ல வேண்டும் என்பதற்கு அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை.
இறுதியாக இந்திய தூதரகம் தலையிட்டு அமைச்சரையும், அவரது குடும்பத்தினரையும் ஹைதராபாதுக்கு விமானத்தில் அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவித்தன.
Source: dinamani
No comments:
Post a Comment