Islamic Widget

August 05, 2010

பரங்கிப்பேட்டை- கிள்ளை பாலம் பணி முடிந்து சாலை அமைக்கும் பணி துரிதம்


பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் 20 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி முடிந்து பாலத்தை இணைக்கும் வகையில் இரண்டு பக்கமும் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

பரங்கிப்பேட்டையிலிருந்து கிள்ளைக்கு செல்வதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் பஸ்சில் புவனகிரி வழியாக சிதம்பரம் சென்று அங்கிருந்து கிள்ளைக்கு வரவேண்டும். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், பொருட்செலவும் ஏற்பட்டது.மேலும் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள மாணவர்கள் கிள்ளை அரசு பள்ளிகளுக்குச் செல்ல வெள்ளாற்றில் படகு மூலம் சென்று வந்தனர். இதனால் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள மீனவர்கள், கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பரங்கிப் பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள் ளாற்றில் பாலம் அமைக்க வேண்டும் என 50 ஆண்டு கால கனவாக இருந்தது.
அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆசியா வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 20 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி பணி துவங்கப்பட்டது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்ததாலும் மழை, வெள்ள காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்துச் சென்றது.தற்போது பாலம் கட்டும் பணி முழுவதும் முடிந்து பாலத்தினை இணைக்கும் வகையில் கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சாலை போடப்பட்டு வருகிறது.
கிள்ளை பகுதி முடிந்து கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப் பேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.மேலும் பாலத்தின் நான்கு பக்கங்களில் 3 லட்சம் மதிப்பில் 6 அடி உயரத்தில் திருவாரூர் தேர் அமைக்கும் பணி நடக்கிறது.இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். நேற்று முதல் பாலத்தின் வழியாக பைக், சைக்கிளில் செல்பவர் கள் சென்று வருகின்றனர். வெள் ளாற்றில் பாலம் கட்டப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள் ளதால் பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி தினமலர்

No comments:

Post a Comment