Islamic Widget

August 04, 2010

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் கடலூர் மாவட்டத்தில்

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும், கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 26-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த கால அவகாசத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த 9 தொகுதிகளில் அதிக பட்சமாக கடலூர் சட்டமன்ற தொகுதியில் 14 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடலூருக்கு அடுத்ததாக சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 13 ஆயிரத்து 549 பேர் விண்ணப்பித்து உள்ளனர். குறைந்த பட்சமாக திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 8 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
ஆனால் இந்த ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேரில் 10 சதவீதம் பேர் 18 வயதுக்கு குறைந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தகுதி நாளுக்கு பிறகு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பலரும் ஆர்வம் மிகுதியால் விண்ணப்பித்து உள்ளனர். குறிஞ்சிப்பாடி தொகுதியில் மட்டும் தகுதி நாளில் 18 வயது பூர்த்தியடையாத சுமார் 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேர் வரை 18 வயதுக்கு குறைந்தவர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தேதிக்குள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர்கள் மட்டுமே இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் உத்தேசமாக அடுத்த மாதம் 15-ந்தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.


Source: Daily Thanthi

No comments:

Post a Comment