கடலூர் தேர்வு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. நகரத்தின் மைய வழியாக கெடிலம் ஆறும், நகர எல்லையையொட்டி தென்பெண்ணையாறும் ஓடுவதால் சுகாதாரத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. "தானே' புயலுக்குப் பின் பசுமையாக இருந்த கடலூர் நகரம் குப்பை நகரமாக மாறிவிட்டது.
புயலின் போது விழுந்த மரங்கள், இலைகள், தண்ணீர் பாக்கெட் பைகள், உணவு பாக்கிங் செய்யும் பிளாஸ்டிக் பெட்டிகள் சிதறி அருவருக்கத்தக்க வகையில் கிடந்தன. இதை தூய்மைப்படுத்த தாம்பரம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதி நகராட்சி ஊழியர்கள் கடலூர் நகரில் குவிந்திருந்த குப்பைகளை ஓரளவு அகற்றினர்.
கடலூர் தேர்வு நிலை நகராட்சியில் 303 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவ்வளவு பேர் இருந்தும் நகரம் முழுவதும் குப்பைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது. இதற்காக 22 வார்டு முதல் 29வது வார்டு வரையில் குப்பைகளை தனியார் அள்ளுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பல இடங்களில் விழுந்து கிடக்கும் மரங்களைக்கூட அகற்றாத நிலை உள்ளது. நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தினந்தோறும் சேரும் குப்பைகள் அகற்ற முடியாத நிலை உள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வீதியில் வரும் வாகனத்தில் கொடுத்தால் எளிமையாக அப்புறப்படுத்தலாம்.
ஆனால் குடியிருப்போர் அவ்வாறு செய்யாமல் பாலித்தீன் பைகள் கலந்த குப்பைகளை அப்படியே குப்பைகுழிகளில் குவிக்கும் நிலை தான் தொடர்ந்து வருகிறது. அதேப்போன்று கழிவு நீர் கால்வாய் தூய்மைப்படுத்துவதே இல்லை. ஒவ்வொரு வீதியிலும் உள்ள கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாயில் அருகில் உள்ள கடைக்காரர்களே தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் பாக்கிங் செய்யும் பாலித்தீன் பைகளை கழிவு நீரில் போட்டு விடுகின்றனர்.
இதனால் குப்பைகள் சேருவதோடு கழிவுநீர் கால்வாயும் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடுகிறது. தற்போது பன்றிக்காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நகராட்சியின் கடமையாகும்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், "கடலூர் நகரத்தில் முன்பை விட தற்போது குப்பை குவிந்து கிடப்பது குறைந்துள்ளது. குப்பை வாகனம் வரும்போது குப்பைகளை கொட்டினால் நகரம் சுகாதாரமாக இருக்கும். பஸ் நிலையத்தில் விவரம் தெரிந்த கடைக்காரர்களே குப்பைகளை அருகிலோ, கழிவுநீர் வாய்க்காலிலோ கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. இதற்காக கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் குப்பைகளை சேராமல் தடுக்கலாம்' என்றார்.
No comments:
Post a Comment