சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதியான நடைமேடை 29 அருகில் ஒரு விளக்குக் கம்பம் உள்ளது. கம்பத்திற்கான மின் இணைப்பு, அதன் கீழ்ப்பகுதியில் உள்ளது. அதில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு குபுகுபுவென புகை வந்து, பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
விமானதள ஓடுபாதை பராமரிப்பு பணியில் இருந்த ஊழியர்கள், இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விமான நிலைய தீயணைப்புத் துறைக்கு உடனே தகவல் கொடுத்தனர். மேலும், எச்சரிக்கை அலராம் ஒலிக்கப்பட்டது.
எச்சரிக்கை அலாரத்தின் ஓசை கேட்டு விமானத்தில் செல்லத் தயாராக இருந்த பயணிகள் அலறினர். உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது. 2 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து, மின்சாதன பராமரிப்புக் குழுவினர் விரைந்து வந்து, விளக்குக் கம்பத்தில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்தனர்.
இயன்ற அளவு விரைவாக, 15 நிமிடத்தில் சரி செய்யப்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தது. அந்த இடத்தில் விமானம் ஏதும் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. அதே நேரம், தீயணைப்பு வீரர்கள் விரைவாகச் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது எனலாம். இந்தச் சம்பவத்தால் விமானப் போக்குவரத்தில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment