Islamic Widget

June 04, 2012

கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால், மும்பை, கேரளா கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து. ஓர் அதிர்ச்சி ஆய்வு

புவி வெப்பமயம் காரணமாக, கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால், மும்பை, கேரளா உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைப் பகுதிகளும், டெல்டா பகுதிகளும் அதனால் பாதிப்படையும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.


ஐ.நா.,வுக்கு அறிக்கை:புவி வெப்பமயமாகி வருவது குறித்து, 120 அமைப்புகளைச் சேர்ந்த 220 விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து, அதுகுறித்த அறிக்கையை ஐ.நா.,வுக்கு அளித்துள்ளனர். கடந்த 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நாகபட்டினம் மற்றும் கடலோரப் பகுதிகளான கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் பிரதிப் ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று, இந்தக் குழு ஆய்வு நடத்தியது.

வாழ்வாதாரம் பாதிப்பு:அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடலோரப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதில் பல ஆச்சர்யமான, அதேநேரத்தில் அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன. 1990-2100 வரையிலான காலத்தில், கடல் நீர் மட்டம், 9 செ.மீ. உயரத்தில் இருந்து, 90 செ.மீ., உயரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புத் தன்மையுடையதாக மாறும். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம். நெல்,கரும்பு விளையும் நஞ்சை நிலங்களின் தன்மையும் பெரிதும் பாதிக்கப்படலாம். நாட்டின் மேற்கு கடற்கரையோர பகுதிகளான குஜராத்தின் கட்ச் மற்றும் மும்பை, தெற்கு கேரளா, கொங்கன் கடற்கரையோர பகுதிகள், அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.

கங்கை, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி மற்றும் மகாநதி ஆகிய டெல்டா பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள நீர்ப்பாசன பகுதிகளுக்கும் ஆபத்து ஏற்படும். நாட்டின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் கலாசார பகுதிகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பால், சில மாநிலங்களுக்கு குறிப்பிடத் தகுந்த விளைவுகள் ஏற்படும்.

ஆய்வில் தகவல்:நாகப்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் "டிஜிட்டல் இமேஜ் ப்ராஸசிங்' முறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், கடல் நீர் மட்டம், ஒரு மீட்டர் அளவுக்கு அதிகரித்தால், 4.2 ச.கி.மீ., அளவுக்கு, கடல் நீர் புகுந்து விடும் என்றும், இரண்டு மீட்டர் அளவுக்கு அதிகரித்தால், 42.5 ச.கி.மீ., அளவுக்கு கடல் நீர் புகுந்து விடும் என்றும் தெரியவந்தது. அதேநேரத்தில், கொச்சியில் நடத்திய ஆய்வில், ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் மட்டம் அதிகரித்தால், 169 ச.கி.மீ., அளவுக்கும், இரண்டு மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் மட்டம் அதிகரித்தால், 599 ச.கி.மீ., அளவுக்கு கடல் நீர் புகுந்து விடும் என்றும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment