Islamic Widget

March 06, 2012

இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்


புதுடெல்லி:ராணுவம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சங்க்பரிவார் சிந்தனையைக் கொண்டவர்கள் ஊடுருவியுள்ளனர். இத்துறைகளில் நுழைவதற்காக ஆர்.எஸ்.எஸ் முயற்சி மேற்கொண்டுவருகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார். குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து
10-வது ஆண்டு நிறைவுறுவதையொட்டி டெல்லியில் அன்ஹத் அமைப்பு ஏற்பாடுச்செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் திக்விஜய்சிங்.
அவர் கூறியது: ‘குஜராத்தில் நிரபராதிகளை போலி என்கவுண்டரில் கொலைச்செய்ய லஷ்கர் போராளிகள் குறித்து செய்தியை உருவாக்கியது ஒரேயொரு இண்டலிஜன்ஸ் ஆஃபீஸர் ஆவார். அவர் மத்திய அரசில் ஐ.பி துணை இயக்குநர் போன்ற உயர்பதவியில் உள்ளார். ஹிந்துத்துவா கொள்கைகளுடன் போராடுவதில் அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் தோல்வியை தழுவிவிட்டன.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு குஜராத் ஒரு பரிசோதனைக் கூடம் போன்று ஆகிவிட்டது. அதில் அவர்களுக்கு ஓரளவு வெற்றியும் கிடைத்துவிட்டது. இதேபோன்ற பரிசோதனைக் கூடமாக தற்போது கர்நாடகாவும் மாறிவருகிறது.

வெறுப்பை போதிக்கும் எந்தவொரு சித்தாந்தத்தையும் எதிர்ப்பதே நமது கொள்கை. இதேபோன்ற சித்தாந்தத்தைத்தான் தேசியவாதம் என்ற போர்வையில் ஹிட்லரும் கடைப்பிடித்தார்.

சங் பரிவார் அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சிகளை அளிக்கின்றன என்று 2002-ம் ஆண்டு நான் கூறியபோது, அதை சிலர் ஏளனம் செய்தனர். தற்போது அது உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது. குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவாவாதிகளின் குழுவில் கர்னல் புரோகித்தும் இடம் பெற்றிருந்தார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சங்க்பரிவார சிந்தனையை உடையவர்கள் ராணுவம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதித்துறைகளில் ஊடுருவியுள்ளனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதனை கூறியதற்காக எனக்கு எதிராக ஏழு மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்பட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நடத்தும் பள்ளிகளில், அதன் சித்தாந்தத்தை மாணவர்கள் மீது திணித்து வருகின்றனர். சில ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் யு.பி.எஸ்.சி. பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய தேர்வாணைய உறுப்பினர்களும் உதவுகின்றனர். இதுபோன்ற மையங்களில் இருந்து ஐ.ஏ.எஸ்.களாகத் தேர்வு பெறுவோரின் எண்ணிக்கையை வைத்து இதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

ஹிந்துத்துவா கொள்கைகளை எதிர்த்து தோற்கடிக்கும் வரை கலவர தடுப்பு மசோதாவால் பலனில்லை.’ இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

No comments:

Post a Comment