Islamic Widget

October 31, 2011

வீராணம் ஏரியால் வெள்ள பாதிப்பு: 40 அடி நீர் தேக்க விவசாயிகள் கோரிக்கை



வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதால் வெள்ளப் பெருக்கை தடுக்க கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் 40 அடி மட்டும் நீரை தேக்கி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி துணைச்செயலாளர் ஆர்.சரவணன் தெரிவித்தது:




கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இப்போது சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் கொண்டு செல்வதால் ஏரியில் 44 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே வீராணம் ஏரியில் 44 அடி நீர் உள்ள நிலையில், மழை அதிகமானால் ஏரியிலிருந்து பழைய கொள்ளிடத்தில் நீர் திறந்து விடப்படும்.

இதனால் ஆண்டுதோறும் குமராட்சி பகுதியில் நந்திமங்கலம், பூலாமேடு, காட்டுக்கூடலூர், வையூர், கண்டியாமேடு, அகரநல்லூர், அத்திப்பட்டு, மாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே மழைக்காலங்களில் ஏரியில் சுமார் 40 அடிக்குள் நீரை தேக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பயிர் காப்பீடு: மேலும் அவர் கூறுகையில், குமராட்சி பகுதியில் உள்ள பழைய கொள்ளிடக் கரையோரம் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்களான குமராட்சி, கீழக்கரை, பருத்திக்குடி, முளளங்குடி, அத்திப்பட்டு, நந்திமங்கலம் நளன்புத்தூர் உள்ளிட்ட 25 கிராமங்கள் குமராட்சி வருவாய் பிர்காவில் உள்ளன.

அதே குமராட்சி வடக்குபகுதியில் உள்ள தவிர்த்தாம்பட்டு, பூலாமேடு, சிவாயம், நாஞ்சலூர், வையூர், கண்டியாமேசு உள்ளிட்ட 25 கிராமங்கள் சிதம்பரம் வருவாய் பிர்காவில் உள்ளன.

வெள்ளம் பாதிப்பின் போது குமராட்சி வருவாய் பிர்காவில் உள்ள கிராமங்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு அப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.

வடக்குப் பகுதியில் உள்ள குமராட்சிக்கு உள்பட்ட கிராமங்கள் சிதம்பரம் வருவாய் பிர்காவில் உள்ளதால் அப்பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படுவதில்லை.

எனவே, சிதம்பரம் வருவாய் பிர்காவில் உள்ள கிராமங்களை, குமராட்சி வருவாய் பிர்காவில் சேர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவருக்கும் பயிர் காப்பீடு தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.சரவணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment