எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து ஹோஸ்னி முபாரக் விலகி உள்ளதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன.முபாரக்கின் பதவி விலகல் ஜனநாயகத்தை நோக்கிய எகிப்தின் பயணத்தின் தொடக்கம்தான். இது முடிவல்ல என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.எகிப்திய மக்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினார்கள்.
அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டுள்ளன. இனி எகிப்து பழைய எகிப்தாக இருக்காது என்றும் ஒபாமா கூறினார். எகிப்து விரைவில் உண்மையான மக்களாட்சிக்குத் திரும்புவதை எகிப்திய இராணுவம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.எகிப்திய மக்களின் குரலை முபாரக் கேட்டு அதனை ஏற்று அந்நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டுள்ளார் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கேத்ரீன் ஆஷ்டன் கூறியுள்ளார்.முபாரக்கின் முடிவை வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றம் என்று வர்ணித்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சல மெர்கல், 1979ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எகிப்து மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.ஜெர்மன் அதிபரின் குரலை எதிரொலித்த இஸ்ரேலிய அதிகாரிகள், எகிப்து மக்களாட்சி முறைக்கு மாறுவது எவ்வித வன்முறையும் இன்றி நடைபெறும் என்று நம்புகிறோம். மேலும் இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கை மதிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளனர்.மக்களாட்சி முறைக்கு விரைவில் மாற வேண்டும் என்று கோரியுள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், எகிப்துக்கு அரிய சந்தப்பர்ப்பம் கிடைத்துள்ளது. மக்களுடன் அரசு இணைந்து செயல்படும் என்று தன்னுடய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.ஹோஸ்னி முபாரக்கின் வங்கிக் கணக்குளை முடக்கியுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு கூறியுள்ளது.ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து, தற்போது அரப் லீக் என்ற அரபு நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் அம்ரு மூசா, இது மிகப்பெரிய மாற்றம் என்று வர்ணித்துள்ளார்.முபாரக் பதவி விலகலை அறிந்த பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சேர்ந்த மக்கள் வாண வேடிக்கைகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காஸா பகுதியின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஹமாஸ் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் சாமி அபூ ஜுஹ்ரி கூறுகையில், எகிப்து அதிபரின் பதவி விலகல் எகிப்தியப் புரட்சியின் வெற்றியின் துவக்கம் என்று கூறினார். எகிப்திய மக்களின் தியாகம் மற்றும் மனம் தளரா நிலையால்தான் இந்த வெற்றி கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அரபு நாடுகளிலேயே முதலாவதாக கத்தர் முபாரக்கின் பதவி விலகலை வரவேற்றுள்ளது. முபாரக்கின் பதவி விலகல், எகிப்திய மக்களின் மறுமலர்ச்சி மற்றும் ஜனநாயகம் குறித்த வேட்கையை நிறைவேற்றும் முக்கியமான நடவடிக்கை என்று கத்தர் கூறியுள்ளது.எகிப்து மக்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது. பாரம்பரிய மிக்க எகிப்திய மக்கள் உலக வல்லரசுகளை நம்பி இருந்த அதிகாரிகளின் தடைகளையும் மீறி இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.1979ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் ஈரானின் மன்னராக இருந்த ஷாவை அப்புறப்படுத்திவிட்டு இஸ்லாமியப் புரட்சி நடைபெற்ற நாளின் 32ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் ஈரானியர்கள் இருந்தபோது எகிப்திய புரட்சியின் வெற்றிச் செய்தி கிடைத்துள்ளதாக ஈரானியர்கள் கூறியுள்ளனர்.
மக்கள் போராட்டத்தை அடுத்து முபாரக் பதவி விலகியதை இந்தியாவும் வரவேற்றுள்ளது. அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக முபாரக் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். அமைதியான முறையில் ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று இராணுவம் அறிவித்திருப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment