கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த பணியில் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள்.
63/4 லட்சம் குடும்பங்கள்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மத்திய அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில் கடைசியாக 2001-ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பிறகு நடப்பு ஆண்டில்(2011) மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு பணி(குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணி) நடந்தது. இதில் கடலூர் மாவட்டத்தில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கிறது தெரியவந்தது. இந்த குடும்பங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எத்தனை பேர் வசிக்கின்றனர் என்பது பற்றிய விவரங்களை கணக்கெடுக்கும் பணி அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
கணக்கெடுப்பு பணியில் 5 ஆயிரம் பேர்
இந்த பணிக்காக 4 ஆயிரத்து 161 களப்பணியாளர்களும், 683 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் என்னென்ன புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என்பது பற்றி இவர்களுக்கு கடலூர் நகராட்சி உள்பட 13 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதுநிலை உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment