சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பாடநூல்கள், தேர்வுகள், மற்றும் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்குவதை நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டதால், சிறுபான்மை மொழிச் சங்கங்களிடம் இருந்து அரசுக்கு சில கோரிக்கைகள் வந்தன. குறிப்பாக, கடந்த 11ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் அந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசும் போது, "பள்ளிக் கல்வித் துறையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் தொடர்பான கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என்றார்.
அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பிக்க, வாரத்துக்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கப்படுமென முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.
மேலும், மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கவும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்துதல், மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம் பெறச் செய்யவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Source:.inneram
No comments:
Post a Comment