புதுச்சேரி: புதுச்சேரி யில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியை புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் கந்தசாமி புறக்கணித்தார். அதேபோல, காரைக்காலில் சோனியா வருகையைக் கண்டித்து காரைக்கால் தனி மாநில போராட்டக் குழுவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இன்று பிற்பகல் சோனியா காந்தி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்து சேர்ந்தார். அங்கு எல்லப்பிள்ளைச்சாவடியில், 64 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை யை சோனியா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை அமைச்சர் கந்தசாமியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர்.
சோனியா பங்கேற்கும் மேடையில் 3 நாற்காலிகள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன. முதல்வர் வைத்தியலிங்கம், உள்துறை அமைச்சர் வல்சராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மட்டும் அமர்வதற்காக இந்த 3 நாற்காலிகளும் வைக்கப்பட்டன.
அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கும் அமைச்சர் கந்தசாமி, தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், தன்னை மேடை ஏற்றாததால், கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறினா. சொன்னபடி அவரும், அவரது ஆதரவாளர்களும் வரவில்லை. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
காரைக்காலில் உண்ணாவிரதம்:
இதற்கிடையே, காரைக்காலில் உள்ள அரசு பொதுமருத்துவமனை, ஆரம்ப சுகாதாரத்தைவிட தரம் குறைந்து இருப்பதாகவும், அதனை மேம்படுத்த புதுச்சேரி அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கக் கோரியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காரைக்கால் போராட்டக் குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் காரைக்கால் பகுதி மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய மருத்துவமனையை சோனியா காந்தி திறந்து வைக்கக் கூடாது என்றும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
புதுசேரியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை சோனியா திறந்து வைப்பது என்பது, காரைக்காலை முற்றிலும் புறக்கணிப்பதற்கு சமம். ஆகையால் சோனியா வரும் நாளை, கருப்பு தினமாக காரைக்கால் போராட்டக்குழு கொண்டாடிக்கொண்டிருக்கிறது என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க காரைக்கால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
திருச்சி சென்றார்
இந்த நிலையில் தனது புதுவை பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சோனியா காந்தி திருச்சி புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் 125-வது ஆண்டு விழா, ராஜீவ்காந்தி பிறந்த தினவிழா, சோனியா காந்தி 4-வது முறையாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்வானதற்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களும், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் காங்கிரஸில் சேரும் விழாவும் இன்று மாலை 4 மணிக்கு திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொண்டு சோனியா காந்தி உரை நிகழ்த்துகிறார். இந்த விழாவில் தங்களது பலத்தைக் காட்டப் போவதாக ஜி.கே.வாசன் ஏற்கனவே கூறியுள்ளார். இதையடுத்து அங்கு காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கோஷ்டியினரும் தங்களது பலத்தைக் காட்டும் வகையில் ஆட்களைத் திரட்டிக் கொண்டு திருச்சியில் குவிந்துள்ளனர். 6 மணிவரை அங்கு இருக்கிறார். பின்னர் விமான நிலையம் திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
சோனியா வருகையையொட்டி திருச்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Source: thatstamil
No comments:
Post a Comment