Islamic Widget

October 09, 2010

அயோத்திப் பிரச்சினையைத் தீர்க்க முத்தரப்பு பேச்சுவார்த்தை-வெற்றி பெற்றதாக அறிவிப்பு

அயோத்தி: அயோத்தி நில உரிமைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு காண முக்கியமான மூன்று மனுதாரர்களான நிர்மோகி அகாரா, முகம்மது ஹசீம் அன்சாரி, ராம் லல்லா ஆகியோர் முதல் முறையாக ஒன்றாகக் கூடி பேசியுள்ளனர். இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் என்ன உடன்பாடு என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.


பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணும் முயற்சியில் அயோத்திப் பிரச்சினை தொடர்பாக முதலில் வழக்கு தொடர்ந்தவரான 90 வயதுப் பெரியவர் அன்சாரி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் முதலில் அகில இந்தியஅகாரா பரிஷத் தலைவர் மஹந்த் கியான்தாஸை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து நேற்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் அன்சாரி தவிர, நிர்மோகி அகாராவின் பஞ்ச ராமதாஸ் , ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் ராம் விலாஸ் வேதாந்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அயோத்தி அனுமன் கோவிலில் இந்த சந்திப்பு நடந்தது. அங்குள்ள கியான்தாஸ் வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கியான்தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இரு மதங்களையும் சேர்ந்தவர்களின் மத உணர்வுகளையும் மன உணர்வுகளையும் மனதில் கொண்டு இந்தத் தீர்வைக் கண்டிருக்கிறோம்; இது இரு சமூகத்தவர் இடையில் எதிர்காலத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க முதல்படியாக இருக்கும். அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கருத்தில் கொண்டே இந்தத் தீர்வை அடைந்திருக்கிறோம்.
மசூதி கட்டுவதற்கு ஹிந்துக்கள் கரசேவை மூலம் முஸ்லிம்களுக்கு உதவவும், கோயில் கட்ட முஸ்லிம்கள் கரசேவை மூலம் ஹிந்துக்களுக்கு உதவவும் உகந்த சூழ்நிலையை உருவாக்க முடிவு செய்திருக்கிறோம்.
இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றத்தாலோ நாடாளுமன்றத்தாலோ தீர்வு கண்டுவிட முடியாது என்பதை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகக் கூறுவோர் உணர வேண்டும்.
சமரசத் தீர்வு காணும் பொறுப்பை அன்சாரி என்னிடம் ஒப்படைத்தார். நான் சம்பந்தப்பட்ட தரப்பைச் சேர்ந்த மூன்று பேரையும் சந்திக்கவைத்து விட்டேன். என்னுடைய வீட்டில் ரோசா - இப்தார் விருந்து நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அயோத்தி பிரச்னைக்கு இங்கு தீர்வு காணப்படும் என்றார்.
ராம் விலாஸ் வேதாந்தி கூறுகையில், அன்சாரியை இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன், அவருடன் உரையாடியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இப்போது காணப்பட்டுள்ள சமரசத் தீர்வு இந்து, முஸ்லிம்களிடையே நிரந்தர ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றார்.
இருப்பினும் சமரசத் தீர்வுத் திட்டம் என்ன என்பதை மூன்று தரப்பும் விளக்கவில்லை.
முன்னதாக நிர்மோகி அகாராவின் பிரதிநிதிகளையும், பின்னர் ராம் ஜென்மபூமி அறக்கட்டளைத்தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸையும், பெரியவர் அன்சாரி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புகளின்போது பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இது சாதகமான பல விளைவுகளுக்கு வழி வகுக்கும் என அகில இந்திய அகாரா பரிஷத் அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அயோத்திப் பிரச்சினையைத் தீர்க்க கடுமையாக முயன்று வரும் பெரியவர் அன்சாரி தற்போது இந்து முஸ்லீம் ஒற்றுமையின் சின்னமாக அயோத்தியில் உருவெடுத்துள்ளார். அவரும், இந்தப் பேச்சுவார்த்தை மிகுந்த பலனை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Source: thatstamil

No comments:

Post a Comment