இரு வாரங்களுக்கு முன், ஒரே மாதிரியான இரு செய்திகளை ஒரே நேரத்தில் நாளிதழ்களில் படிக்க நேர்ந்தது. வடகொரியாவின் தலைவர் (கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவரே தலைவர்) 'கிம் ஜோங் இல்' தமது வாரிசாகத் தம் மகன் 'கிம் ஜோங் உன்'னை நியமித்ததை அவரது மற்றொரு மனைவிக்குப் பிறந்து தந்தையை விட்டுப் பிரிந்திருக்கும் மூத்த மகன் 'கிம் ஜோங் நாம்' விமர்சித்திருந்தார். எனினும் தம் தந்தை எடுத்த முடிவிற்குக் கட்டுப்படுவதாகவும் நாட்டுக்குத் தலைமை தாங்கும் பெரும் பொறுப்பில் தம்பிக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.
இந்தச் செய்தியைப் படித்தபோது, சின்னஞ்சிறு அளவில் இந்தியச் சாயலிருப்பதாகத் தோன்றியது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் பேரனும் கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே சிவசேனாவின் இளைஞர் அணியான 'யுவசேனா'வுக்குத் தலைவராகிறார் என்ற அடுத்த செய்தி என் எண்ணத்தை உறுதிப்படுத்தியதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
வடகொரியத் தலைவர் தம் தந்தையான 'கிம் இல் ஸங்'ஙிடமிருந்து தலைவர் பொறுப்பை ஏற்று இப்போது தம் மகனுக்குத் தலைவர் பொறுப்பை அளிப்பதுபோல் ராஜ்தாக்கரே -- உத்தவ் தாக்கரே --ஆதித்ய தாக்கரே என முறையாக வருவதாகத் தோன்றியது.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான பம்பாய் (மும்பை)நகரத்தில் தொழில் வாய்ப்புகள் மிகுந்திருந்தன. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் வாழ்ந்தவர்களும் தென்னிந்தியர்களும் குஜராத்திகளும் வட மாநிலத்தவரும் பம்பாய் நகரத்தில் குடியேறிப் பலதரப்பட்ட வேலைகளிலும் வியாபாரங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாகத் தமிழர்களும் மலையாளிகளும் வெள்ளைக் காலர் வேலைகளைக் கைப்பற்ற, வட மாநிலத்தவர் அடிமட்ட வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்...
இந்தியாவின் மான்செஸ்டர் ஆன பம்பாயில் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு மிகுந்திருந்த அக்காலகட்டத்தில் தொழிற்சங்கங்களால் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் கதவடைப்புகளும் நடந்தன. அதனால் பல தொழில்களும் அந்நகரத்தை விட்டு விலக்கிக் கொள்ளப் பட்டன. இதனால் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் ஆனது. வெள்ளைக் காலர் வேலைகளும் இல்லை; சிறு/ பெரு வியாபாரங்களும் இல்லை; தொழிற்சாலைகளிலும் வேலை இல்லை; வருமானமும் இல்லை. விரக்தியில் இருந்த பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். தொழிலதிபர்களிடம் 'ஹப்தா' எனப்படும் பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர்.மகாராஷ்டிர மாநிலம் உருவான 1960 ஆம் ஆண்டு, தம்மால் நிறுவப்பட்ட "மம்ரிக்" எனும் இதழில், பிற மாநிலத்தவரால் - குறிப்பாகத் தமிழர்களால்-- பறிக்கப்படும் மராத்தியனின் வேலை வாய்ப்பையும் மராத்திய இளைஞனுக்கு இழைக்கப்படும் அநீதியையும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் நிரப்பி இளைஞர்களைத் திரட்டி அவர்களின் பேராதரவால் சிவசேனாவைத் தொடங்கினார் பால்தாக்கரே!
பம்பாயின் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய நீதியும் வாய்ப்பும் பெற்றுத் தருவோம் எனச் சொல்லி 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பால்தாக்கரேயால் 'சிவசேனா' துவங்கப்பட்டது. மாநில உரிமை எனத் துவங்கப்பட்டு பிற மாநிலத்தவர் மீது வெறுப்பு என வளர்க்கப்பட்டது சிவசேனா! தென்னிந்தியர்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர்; கல்வியறிவுடன் வந்து, சிறிய சம்பளத்தில் கூடத் தயக்கமின்றி வேலையில் சேர்ந்திருந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
சிவசேனா துவக்கப்பட்ட காலத்தில் இருந்து எண்பதுகள் வரை அவ்வமைப்பைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தது மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சியே! பம்பாயில் செல்வாக்குப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகச் சிவசேனாவையும் அதன் ரவுடித்தனத்தையும் பாதுகாத்தது காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸ் மட்டுமின்றிக் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் பால்தாக்கரேயின் தயவை நாடி நின்றன.
"மகாராஷ்ட்ரா மராத்தியருக்கே" என்ற இனவெறியுடன் துவங்கப்பட்ட சிவசேனாவின் ரவுடியிஸப் 'பரிணாமம்' இந்துத்துவ சக்திகளுடன் வெளிப்படையாகக் கைகோர்த்த பின் முஸ்லிம் எதிர்ப்பு என்ற கோர முகத்துடன் காவிப் 'பரிமாணம்' பெற்றது. 1970 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிவசேனா தலைமையில் பீவண்டியிலும் ஜல்கோனிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தில் எண்பத்திரண்டுபேர் கொல்லப்பட்டனர்; முஸ்லிம்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன்.
1974 ஆம் ஆண்டு, தலித்பேந்தர் இயக்கத்துக்கு எதிராகக் கலவரத்தில் ஈடுபட்டு அதன் தலைவரான பகவத் ஜாதவைக்கொன்றது சிவசேனா!.
சமுதாய முன்னேற்ற அமைப்பு என்று கூறிக்கொண்டாலும் 1967 தேர்தலில் மறைமுகமாகக் கலந்து கொண்டது சிவசேனா. நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட வி.கே. கிருஷ்ணமேனன் மலையாளி என்பதாலும் எஸ்.ஏ. டாங்கே கம்யூனிஸ்ட் என்பதாலும் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் சோஷலிஸ்ட் என்பதாலும் அவர்களைத் தோற்கடிக்கக் களமிறங்கியது. எனினும் கம்யூனிஸ்டும் சோஷலிஸ்டும் அத்தேர்தலில் வெற்றிபெற்றனர்..
அவ்வாண்டிலேயே தாணா நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 17 இடங்களில் வென்று தலைவர் பதவியையும் பெற்றது சிவசேனா. பின்னர் பம்பாய் மாநகராட்சி, சட்டசபை எனத் தேர்தல்களில் போட்டியிட்டு முழுநேர அரசியலில் குதித்தது.
மராத்திய இளைஞர்களிடையே கல்வியறிவும் விழிப்புணர்வும் அதிகரித்து அவர்களும் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை அடையத் தொடங்கினர். மராத்திய மக்களின் முதன்மைப் பொழுதுபோக்கான நாடகங்களின் ஆதிக்கம் அதிகமாகி உலகியல் பார்வை விரிவு பெற்றதால் மண்ணின் மைந்தர்கள் கோஷம் தாக்குப் பிடிக்காமல் கலகலத்துப் போவதை உணர்ந்து கொண்ட பால்தாக்கரே, மிக விரைவாக முழுமையான காவிப் படையாக சிவசேனாவை மாற்றிக் கொண்டார்.
1992 ஆம் ஆண்டில் பாபர்மசூதி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் உள்ளாடையைக் கூட விலக்கிப் பார்த்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இக்கலவரத்திற்கு சூத்திரதாரியான பால்தாக்கரேயையும் சிவசேனாவையும் கிருஷ்ணா கமிஷன் அடையாளம் காட்டியும் சட்டமோ நீதியோ அவர்களின் நிழலைக் கூடத் தொட முடியவில்லை என்பது அவர்களுக்குப் பெரும் பலத்தைத் தந்தது.
மராத்தியரல்லாதவர், முஸ்லிம்கள், தலித்கள் எனும் மூன்று பிரிவினரையும் தாக்குவதும் விரட்டுவதுமே கொள்கை என்றாகி, மெல்ல மெல்லத் தொழிற்சங்கங்களையும் கைப்பற்றி, அரசியலில் ஈடுபட்டு, அரசு, காவல்துறை, தொழில்கள், திரைப்பட உலகம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்ட்ராவின் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது சிவசேனா.
பால்தாக்கரேயின் ரவுடித்தனத்தால் கவரப்பட்ட பாமக ராம்தாஸ்கூட, "இலங்கையில் கொல்லப்படும் இந்துத் தமிழர்களைக் காக்க" என்ற போர்வையில் இவர்களை வைத்துக் கூட்டம் நடத்தினார். எந்தத் தமிழர்களையும் மலையாளிகளையும் பால்தாக்கரேயும் சிவசேனாவும் பம்பாய் நகரத்திலிருந்து அடித்து விரட்டினார்களோ, அந்தத் தமிழர்களும் மலையாளிகளும் சிவசேனாவின் காவிப்பரிமாணத்தால் தத்தம் மாநிலத்தில் சிவசேனாவின் கிளைகளை அமைத்துள்ளனர் என்பது வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் என்பதை மறுப்பதற்கில்லை.
(மீதி அடுத்த வாரம்............)
- அலசல் By ரஸ்ஸல்
Source: inneram.com
No comments:
Post a Comment