ரயில்கள் மோதிக் கொண்டதில், வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் நொறுங்கின. உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினும் சேதம் அடைந்தது.
ரயில் நிலையத்திலேயே விபத்து நடந்ததால் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கியது. ரயில்வே ஊழியர்கள், உள்ளூர் போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை தொடங்கினர். அவர்களுக்கு சைந்தியா நகர மக்களும் உதவினர். ரயில் பெட்டிகள் நசுங்கிபோய் இருந்ததால், காயம் அடைந்தவர்களையும், சடலங்களையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், ராணுவத்தின் உதவி கேட்கப்பட்டது.
7 அதிகாரிகள் தலைமையில் 160 வீரர்களை கொண்ட ராணுவ மீட்பு குழு சைந்தியா ரயில் நிலையத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டது. அந்த குழுவில், டாக்டர்கள், இன்ஜினியர்கள் இடம் பெற்றிருந்தனர். அதிநவீன காஸ் கட்டிங் கருவிகளை பயன்படுத்தி, நொறுங்கி கிடந்த ரயில் பெட்டிகளை அறுத்து, உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயணிகளையும், சடலங்களையும் மீட்டனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு கொண்டு செல்ல விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதே போல், 140 பேர் கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையும் மீட்பு பணிகளில் உதவியது. அவர்கள் அழைத்து வந்த மோப்ப நாய்கள் நொறுங்கிய ரயில் பெட்டிகளில் இருந்த சடலங்களையும், காயமடைந்தவர்களையும் அடையாளம் காண உதவின. எல்லை பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment