Islamic Widget

August 07, 2012

சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!

சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்திய நகரான தம்மாம் நகரிலுள்ள உணவகம் ஒன்று, வாடிக்கையாளர்கள் தட்டில் உணவை மீதம் வைத்தால் அதற்காக அபராதம் விதிக்கத் தீர்மானித்துள்ளது. உணவை வீணாக்குவது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது என்று அந்த உணவகம் தனது குறிப்பில் கூறியுள்ளது.உணவுப் பொருட்கள் பெருமளவு வீணடிக்கப்படுவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்றாலும், இப்படியொரு புதிய வரியை மதரீதியில் ஏற்க இயலாது என்று இணையதள வாசகர்கள் பலரும் கருத்தளித்துள்ளனர். இதில் உணவக உரிமையாளர்களுக்கு வாடிக்கையாளர் மீது எந்த உரிமையும் இருப்பதை ஏற்க இயலாது என்று அரபு நாளிதழ் ஒன்றில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். “முதலில், அதிக விலை வைப்பதை இவர்கள் நிறுத்தட்டுமே” என்கிறார் சாத் என்கிற ஒரு வாசகர்.“இது நல்ல யோசனையில்லை; மாறாக, அப்படி வீணாகும் உணவுகளைச் சேமித்து, ஏழை மக்களுக்கு வழங்க முன்வரலாமே” என்கிறார் மற்றொரு அரபு வாசகர். “அல்லது, தேவையான பைகளை விநியோகித்து, மீதமாகும் உணவுகளை வாடிக்கையாளர்களே எடுத்துச் செல்லப் பணிக்கலாமே” என்கிறார்.
சில வாசகர்களும், வாடிக்கையாளர்களும் இப்படி கருத்தளித்த போதிலும், பரவலாக இந்த புதிய உணவு வீண் எதிர்ப்பு வரிக்கு  வரவேற்பு கிடைத்துள்ளது.
“இது நேர்மறை சிந்தனை” என்கிறார் முஹம்மத் என்கிற மற்றொரு வாசகர். “உணவை வீணடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வை இது ஏற்படுத்தும்” –
“இன்னும் சொல்லப்போனால், உணவை வீணடிக்காமல் முழுமையாக உண்டு முடிக்கிற வாடிக்கையாளர்களுக்கு ஊக்கப்பரிசாக மேலும் ஒரு உணவுச் சீட்டு கொடுக்கலாம்”  என்கிறார் மற்றொரு வாடிக்கையாளர்.
“உணவிலும் உணர்விலும் அதீதம் காட்டும் நமது நாட்டில், எல்லா உணவகங்களும் இந்நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். நமக்கு வாய்த்த வசதிகளைக் கொண்டு ஊதாரித்தனமாக வாழாமல் தேவைக்கேற்ப வாழ்வதற்கு நாம் கற்றுத்தான் ஆக வேண்டும்” என்கிறார் முஹம்மத் என்கிற அந்த வாடிக்கையாளர்.
அரபு ஊடகங்களில் இது பற்றிய விவாதம் இன்னும் களைகட்டுகிறது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் வாசகர்களே..!

No comments:

Post a Comment