Islamic Widget

July 06, 2012

கஸ்டடி சித்திரவதை:இழப்பீட்டுத் தொகையை போலீசாரிடமிருந்து வசூலிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்!


Police Tortureபுதுடெல்லி:போலீஸ் கஸ்டடியில் சித்திரவதைக்கு பலியாகும் நபர்களுக்கு குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை ஈடுச் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பொறுப்பு என்ற நிலையில் சித்திரவதையால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், இதற்கான தொகையை பொதுமக்களின் கஜானாவில் இருந்து பெறக்கூடாது என்று நீதிபதிகளான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

வரி செலுத்தும் பொதுமக்களின் பணத்தில் இருந்து இழப்பீட்டுத் தொகையை அளிப்பதற்கு பதிலாக சம்பவத்தில் குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
20 வருடங்களுக்கு முன்பாக போலீஸ் காவலில் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவர் மஹ்மூத் நய்யார் ஆஸம், தனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடமை தவறிய போலீஸ் அதிகாரிகளிடமிருந்து இழப்பீடு தொகையை வசூலித்து ஆஸமிற்கு வழங்க சட்டீஷ்கர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீட்டிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதிட்ட சட்டீஷ்கர் அரசு வழக்குரைஞரிடம் கடுமையாக நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். அதேவேளையில் இழப்பீட்டுத் தொகையை 10 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக குறைக்குமாறு ஆஸமிடம் உச்சநீதிமன்றம் கோரிக்கை விடுத்தது.
சட்டீஷ்கர் மாநிலத்தில் சிம்ரி மாவட்டத்தில் சமூக சேவை புரிந்து வந்த ஆயுர்வேத மருத்துவரான மஹ்மூத் நய்யார் ஆஸமை, மின்சாரத்தை திருடினார் என குற்றம் சாட்டி 1992-ஆம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் எடுத்தது. கஸ்டடியில் வைத்து சித்திரவதைச் செய்ததுடன், தனது மனைவியை வீட்டில் சென்று அவமதிக்க போலீஸ் முயன்றதாகவும், இதன் காரணமாக தனது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவத்தில் தேசிய மனித உரிமை கமிஷன் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து ஆஸம் நீதிமன்றத்தை அணுகினார்.

No comments:

Post a Comment