Islamic Widget

May 19, 2012

சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!

பெங்களூர்:’கோயம்புத்தூரில் என்னை சதிவலையில் சிக்கவைத்தார்கள். இறைவனின் கிருபையால் நான் அந்த வலைப் பின்னல்களை முறியடித்து வெளியே வந்தேன். பெங்களூரில் ஒன்றரை வருடமாக திட்டமிட்டு பின்னப்பட்ட வலையில் என்னை சிக்கவைத்தார்கள். எனக்கு எதிராக அவர்கள் தயார் செய்தது பொய் சாட்சிகளும், போலியான ஆதாரங்களுமாகும்.

நீதிமன்றம் நீதியுடன் நடந்துகொண்டால் கட்டுக் கதைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சின்னாப் பின்னமாகிவிடும். சி.ஆர்.பி.சி 164-வது பிரிவின்படி ஒரு சாட்சியிடம் 3 முறை வாக்குமூலம் பெற்றுள்ளார்கள். ஆனால், அவர் 3-வது தடவைதான் எனது பெயரை கூறினார். இவ்வாறு அரசு தரப்பு வழக்கை ஜோடித்துள்ளது’-கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் மனித உரிமை ஆர்வலர் என்.எம்.சித்தீக்குடன் நடத்திய நேர்முகத்தில் அப்துல் நாஸர் மஃதனி இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது:’கோயம்புத்தூர் சிறையில் ஜாமீன் கிடைக்காமல் ஒன்பதரை ஆண்டுகள் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அங்கு நீதியான விசாரணை நடைப்பெற்றதாகவே கருதுகிறேன். ஆனால், இந்த சிறையில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் வெறும் நாடகமாகும். இவ்வழக்கில் இருந்து என்னை விடுவிக்க கோரும் மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான ஜவஹர்லால் குப்தா, சாந்திபூஷன், சுசில்குமார் ஆகியோர் பத்தரை மணிநேரம் வாதம் புரிந்தனர்.

யு.ஏ.பி சட்டத்தை சுமத்தவதன் அபத்தங்களைக் சுட்டிக்காட்டி திறமையாக வாதம் புரிந்தார்கள். அரசு தரப்பு வழக்குரைஞர் ராஜினாமாச் செய்துவிட்டு சென்றுவிட்டார். நீதிபதி வாதம் கேட்டார். பின்னர் புதிய அரசு தரப்பு வழக்குரைஞர் வந்தார். இறுதியாக எதிர்தரப்புக்கு நகலைக்கூட அளிக்காமல் ஏதோ சில ஆவணங்களை தாக்கல் செய்து பத்து நிமிடங்களில் தனது வாதத்தை முடித்துவிட்டார்.

நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடிச் செய்தது. குற்றச்சாட்டை பதிவுச்செய்யும் வேளையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை என கூறினர். ஆனால் நான் மெளனமாக இருந்தேன். இறுதியாக என்னிடம் நீதிபதி கேள்வி எழுப்பிய பொழுது நான் கூறினேன்: இவ்வழக்கு நீதியாகத்தான் நடைபெறுகிறது என்பதை குற்றம் சாட்டப்பட்டோரை நம்பவைக்க நீதிமன்றம் நடத்தும் நாடகம் கூட தோல்வியை தழுவியுள்ளது. நீதியின் ஒரு சிறு சப்தம் கூட இங்கு எழவில்லை. ஆனால், நான் இந்த நீதிமன்றம் மீது நம்பிக்கை இழக்கவில்லை.’ இவ்வாறு மஃதனி கூறினார்.

சர்க்கரை நோயாளியான அப்துல் நாஸர் மஃதனி டயபடிக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டு வலது கண்ணின் பார்வையை இழந்துள்ளார். இடது கண்ணிலும் நோய் பாதித்துள்ளது. cervical spondylitis, முதுகு வேதனை, டிஸ்க் கொலாப்ஸ், இரத்த அழுத்தம், செயற்கை கால் பொருத்திய வலது காலின் தசைகள் சுருங்குதல், இடது காலில் வீக்கம் மற்றும் உணர்வின்மை, சிறுநீர் தடங்கல், அல்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனி சிறையில் போதிய சிகிட்சை இன்றி அல்லல் பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment