
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று பேச்சு அடிபட்டு வந்தது. தேர்தலுக்கு முன்பு உயர்த்தினால், கட்சிகளின் ஆதரவு கிடைக்காமல் போகும் என்பதால் அதற்கு முன்பு விலை உயர்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்து வந்தது.
இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் நேற்று இரவு முதல் பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தி விட்டன.
லிட்டருக்கு70 பைசா என விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.54 என்று மிகக் கடுமையாக உயர்த்தியது பெட்ரோலிய நிறுவனங்கள். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதையடுத்து அடுத்தடுத்து 2 முறை ஓரளவுக்கு பெட்ரோல் விலையைக் குறைத்தன பெட்ரோலிய நிறுவனங்கள். ஆனால் தற்போது மீண்டும் விலையை உயர்த்தி விட்டன.
இந்த விலை உயர்வுக்கு திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மமதா கூறுகையில், மிகவும் கவலைக்குரிய விஷயத்தை மீண்டும் செய்துள்ளனர் என்று சாடியுள்ளார்.
No comments:
Post a Comment