Islamic Widget

October 18, 2011

நவம்பர் முதல் மின் உற்பத்தியைத் தொடங்குகிறது கூடங்குளம் அணு மின் நிலையம்

டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டத்தைப் பொருட்படுத்தாமல் அடுத்த மாதம் முதல் அணு மின் உற்பத்தியைத் தொடங்க இந்திய அணு சக்தி கமிஷன் நடவடிக்கைளை முடுக்கி விட்டுள்ளது. இதை அணு சக்தி கமிஷன் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.


அதற்கு முன்பாக அணு மின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மக்களிடையே நேரடியாக விளக்க பிரசாரத்தை மேற்கொள்ளவும் அணு சக்தி கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு குழு விரைவில் கூடங்குளத்திற்கு அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, கடந்த செப்டம்பர் மாதத்திலேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் நடந்து வரும் போராட்டத்தால் அது தாமதமடைந்துள்ளது.

அணு மின் நிலையத்தை மூடுவது என்பது இயலாத காரியம். அதை மத்திய அரசு ஏற்க முடியாது. பணிகளைத் தொடங்கி விட்டால், நடுவில் அதை விட முடியாது. இதை விட்டால், பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும்.

இன்னும் சில பணிகள் மட்டுமே பாக்கி உள்ளன. அது முடிந்ததும் உற்பத்தியைத் தொடங்கி விட முடியும். அடுத்த மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

மேலும் அவர் கூறுகையில், கூடங்குளம் போராட்டத்தை ஒரு கிறிஸ்தவ அமைப்புதான் முன்னின்று நடத்தி வருகிறது. இதுதவிர இடிந்தகரை, கூடங்குளம் கிராம மக்களும் போராட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளனர். இவர்களை நேரடியாக அணுகி, அணு மின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கவுள்ளோம். இதற்காக ஒரு நிபுணர் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பலவேறு நிபுணர்கள் இதில் இடம் பெறுவர். அணு உலைகள் குறித்த நிபுணர்களும் இதில் இருப்பார்கள் என்றார் அவர்.

No comments:

Post a Comment