Islamic Widget

July 24, 2010

கடலூரில் கடல் சீற்றம்

கடலூரில் வெள்ளிக்கிழமை பாறையில் மோதி பழுதடைந்த படகை கயிறு கட்டி இழுக்கும் மீனவர்கள்.
கடலூர், ஜூலை 23: கடலூரில் வெள்ளிக்கிழமை திடீரென கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கரைக்குத் திரும்பிக் கொண்டு இருந்த விசைப் படகு கருங்கல் பாறையில் மோதி, சேதம் அடைந்தது. இதில் 3 மீனவர்கள் காயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்ட கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டது. அலைகள் 10 அடி உயரத்துக்கு மேல் எழுந்து ஆர்ப்பரித்தன. இதனால் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடிக்கச் சென்ற சில மீனவர்களும் அவசர அவசரமாகக் கரைக்குத் திரும்பினர்.
கடலூர் முதுநகரைச் சேர்ந்த சம்பத்துக்குச் சொந்தமான விசைப் படகில் அங்கப்பன் உள்ளிட்ட 5 பேர் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று இருந்தனர். அவர்கள் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மீன்களைப் பிடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
துறைமுக முகத்துவாரத்தில் கொட்டப்பட்டு இருந்த கருங்கல் பாறைகளில் மோதி, படகு சேதம் அடைந்தது. ரூ.13 லட்சம் மதிப்பிலான அந்தப் படகில் ரூ.1 லட்சம் அளவுக்குச் சேதம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
படகில் பயணம் செய்த மீனவர்கள் அங்கப்பன் (48), ஆறுமுகம் (55), சேகர் (37) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கடலூரில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் அங்காடிகளில் மீன்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. விலைகள் உயர்ந்து இருந்தன.

No comments:

Post a Comment